சம்பளத்தை விட அதிக கடன் இஎம்ஐ கட்டுறீங்களா.. எந்தெந்த வங்கிகள் உங்களுக்கு உதவும் தெரியுமா?
சென்னை: இன்றைக்கு ஏதாவது ஒரு நெருக்கடியான சூழலுக்கு கடன் வாங்கியவர்கள் தள்ளப்படுகிறார். வேலை இழப்பு, எதிர்பாராத நிகழ்வுகள், முட்டாள்தனமான முடிவுகள், ஆப் லோன்களின் வலையில் சிக்குவது போன்ற எதிர்பாராத நிலைய பலர் சந்திக்கிறார்கள். அப்படியான சூழலில் சம்பளத்தைவிட அவர்கள் கட்ட வேண்டிய இஎம்ஐ நினைத்தே பார்க்க முடியாத வகையில் இருக்கும். அப்படியானஏ சூழ்நிலையில் நேரடியாக மற்றொரு புதிய தனிநபர் கடனைப் பெறுவது மிகக் கடினம்; எனினும் தற்போதைய கடன்களை அடைக்க அல்லது மாதாந்திரத் தவணைத் தொகையைக் குறைக்க சில நல்ல் வழிகள் உள்ளன. அவை எந்தெந்த வங்கிகளில் கிடைக்கும் என்பதை பார்ப்போம்
சென்னையில் கணிசமானோர் பல கடன்களை வாங்கி உள்ளார்கள். வீட்டுக்கடன், கார் கடன், தங்க நகை கடன், மொபைல் கடன், தனி நபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன் என ஏதாவது ஒரு கடன் இல்லாதவர்கள் இங்கு மிகக்குறைவு. இந்த கடன்கள் எல்லாமே ஒருவருக்கும் சில நேரங்களில் இருக்கும். இவர்களின் மாத சம்பளத்தைவிடவும் இஎம்ஐ அதிகமாக இருக்கும். எதிர்பாராத சூழலில் வேலை இழப்பு, வேலை மாறுதல், புதிய வேலை கிடைக்க தாமதம் போன்ற சூழலை பலரும் எதிர்கொள்கிறார்கள்

இப்படியான சூழலில் ஒருவேளை நீங்கள் இருந்தால் எதிர்கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம். உங்களிடம் இருக்கும் பல சிறிய கடன்கள் (கடன் அட்டை பாக்கி, இரண்டு அல்லது மூன்று தனிநபர் கடன்கள்) அனைத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரே கடனாக மாற்றி, நீண்ட காலத் தவணையாக மாற்றலாம். இதன் மூலம் மாதந்தோறும் கட்ட வேண்டிய தவணைத் தொகை கணிசமாகக் குறையும்.
இந்தக் கடனை வழங்கும் முதன்மை வங்கிகள் மற்றும் சாரா நிதி நிறுவனங்கள்:
பொதுத்துறை வங்கிகள் (குறைந்த வட்டிக்கு)
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ): அவர்களின் 'விரைவுக் கடன்' திட்டத்தின் கீழ், ஏற்கனவே உங்களிடம் அந்த வங்கியில் சம்பளக் கணக்கு இருந்தால், பழைய கடன்களை அடைப்பதற்கான சிறப்புப் பலன்களுடன் கடன் பெறலாம்.
பரோடா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி: இவற்றில் வட்டி விகிதங்கள் பொதுவாக 10.5 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கும்.
தனியார் துறை வங்கிகள்
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி: வட்டி விகிதங்கள் 9.99 சதவீதத்தில் தொடங்குகின்றன. இதில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், கடனை முன்கூட்டியே அடைத்தால் அதற்கான அபராதக் கட்டணம் எதுவும் கிடையாது.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி: உங்களின் சிபில் ஸ்கோர் 750 மேல் இருந்தால், இந்த வங்கிகள் உடனே அதிகத் தொகை கொண்ட கடன் ஒருங்கிணைப்புக் கடன்களை வழங்குகின்றன.
சாரா நிதி நிறுவனங்கள்
பஜாஜ் ஃபின்சர்வ், டாடா கேபிடல் மற்றும் ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ்: உங்களின் வருமானம் சற்று குறைவாக இருந்தாலும் அல்லது வங்கி விதிகள் கடினமாக இருந்தாலும், இந்த நிறுவனங்கள் நீண்ட காலத் தவணையில் (குறைந்த மாதாந்திரத் தவணையில்) கடன் வழங்க முன்வருகின்றன.
கடன் மறுசீரமைப்பு
புதிய கடன் எதுவும் கிடைக்காத பட்சத்தில், நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கியிருக்கும் வங்கியைத் தொடர்பு கொண்டு இந்த வசதியைக் கேட்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, நிதி நெருக்கடியில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும்.
எப்படி உதவும்?
உங்களிடம் இருக்கும் தற்போதைய மூன்று ஆண்டு கடனை ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக நீட்டிக்க வங்கியிடம் கோரலாம். கடன் காலம் அதிகரிக்கும் போது, உங்களின் மாதத் தவணைத் தொகை பாதிக்கு பாதியாகக் குறைந்துவிடும்.
செய்ய வேண்டியவை: உங்கள் வங்கியின் கிளை மேலாளரை நேரில் சந்தித்து, உங்கள் தற்போதைய சம்பளச் சீட்டு மற்றும் மாதத் தவணை விவரங்களைக் காட்டி, "என்னால் இவ்வளவு பெரிய தவணைத் தொகையைக் கட்ட முடியவில்லை, கால அவகாசத்தை நீட்டித்துத் தாருங்கள்" என்று கோரிக்கை கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
கடன் நெருக்கடியில் இருக்கும் எவரும் மீண்டும் புதிய இணையவழி கடன் செயலிகளின் (ஆப்ஸ்கள்) வலையில் விழுந்துவிடக் கூடாது. தங்களின் சம்பளக் கணக்கு உள்ள வங்கியின் மேலாளரை நேரில் சந்தித்துப் பேசுவதே இதற்கான முதல் மற்றும் மிகச் சரியான படியாகும்.












Click it and Unblock the Notifications