தவெக எம்எல்ஏவிடம் திருநாவுக்கரசு பேசிய டீல் என்ன.. காரணம் செந்தில் பாலாஜி தம்பியா.. எப்ஐஆரில் ஷாக்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் தவெக குதிரை பேரம் நடத்துவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகாரில் ஐபிடிஎஸ் நிறுவனத்தின் திருநாவுக்கரசு, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இளையராஜாவிடம் திருநாவுக்கரசு என்ன டீல் பேசினார் என்கிற எப்ஐஆர் விபரம் வெளியாகியுள்ளது.
தவெக எம்எல்ஏ இளைராஜாவிடம் பேரம் பேசியதாக திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி கார்த்தி, ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்ட பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிக்கு லஞ்சம் பெற பேசுவது, முயற்சி செய்வது, குற்றத்துக்கு உடைந்தையாக இருப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திருவல்லிகேணி காவல்துறையினர் வழக்குபதிந்துள்ளனர்.

நல்ல விஷயத்துக்கு
எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன, "திருநாவுக்கரசு என்பவர் கடந்த 26.6.2026 தேதி காலை ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
திருநாவுக்கரசு ஐபிடிஎஸ் என்கிற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். ஒரு நல்ல விஷயத்துக்காக கால் செய்யறேன். உங்களை எனக்கு நல்லா தெரியும். உங்களை நேரில் வந்து சந்திக்கலாமா என்று திருநாவுக்கரசு கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா, நான் வெளியூர் போறேன். எதுவாக இருந்தாலும் போனிலேயே சொல்லுங்க என கூறியுள்ளார்.
அதற்கு திருநாவுக்கரசு இணைப்பை துண்டித்துள்ளார். அதே நாள் இரவு இரவு மீண்டும் வாட்ஸப் கால் செய்துள்ளார். முக்கிய கட்சியின் மூத்த நிர்வாகி சொல்லித்தான் பேசுகிறேன். நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நாங்கள் சொல்வது போல நடந்து கொண்டால் ரூ.35 கோடி கொடுக்க தயார். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு பத்திரிகையாளர் உங்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பிடிகொடுக்காமல் நழுவியுள்ளீர்கள்.
ஆட்சி நீடிக்காது
இந்த ஆட்சி 5 வருடங்கள் எல்லாம் நீடிக்காது. எங்கள் தயவு இல்லாமல் இந்த ஆட்சி நிலைக்காது. நான் பேசுவதை யாரிடமும் சொல்ல கூடாது. மீறி சொன்னால் உங்கள் குடும்பத்தினர் உயிருடன் இருக்க மாட்டார்கள். நீங்கள் ஓ.கே சொன்னால் நரேன் கிருஷ்ணன், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சந்திப்பார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் அவர்கள் பார்த்து கொள்வார்கள்" என்று கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications