ஸ்டாலினுக்காக திமுக எம்எல்ஏ ராஜினாமா? திருவாரூர் தொகுதிக்கு வரும் இடைத்தேர்தல்? விஜய்க்கு ஷாக்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தோல்வியை தழுவினார். இந்நிலையில் தான் முக ஸ்டாலினுக்காக திருவாரூர் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அதன்பிறகு அந்த தொகுதியில் முக ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிட்டிங் முதல்வராக, திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்று திமுகவினர் நினைத்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியை தழுவினார். தவெக வேட்பாளர் விஎஸ் பாபு, முக ஸ்டாலினை தோற்கடித்தார்.
இதனால் முக ஸ்டாலினால் தமிழக சட்டசபைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் எப்படியாவது முக ஸ்டாலினை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் திமுக தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

தற்போது 7 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதுதவிர பெரம்பூர், திருச்சி கிழக்கில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் ஏதாவது ஒரு தொகுதியில் முக ஸ்டாலின் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. ஆனால் இந்த தொகுதிகள் அனைத்தும் அதிமுகவிற்கு செல்வாக்கான இடங்கள். இதனால் திமுக தலைமை தயங்குகிறது.
இப்படியான சூழலில் தான் திமுக தலைமை வேறு ஒரு திட்டத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முக ஸ்டாலினின் தந்தையான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்வீகமான திருவாரூர் சட்டசபை தொகுதியில் முக ஸ்டாலினை போட்டியிட வைக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது திருவாரூர் தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவின் பூண்டி கலைவாணன் உள்ளார். இவரை ராஜினாமா செய்ய வைத்து அதன்பிறகு வரும் இடைத்தேர்தலில் முக ஸ்டாலினை களமிறக்குவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
திருவாரூர் சட்டசபை தொகுதி என்பது திமுகவின் கோட்டையாகும். கடந்த 1971 ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் 14 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக திமுக 10 முறை வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 1996ம் ஆண்டுக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.
1996, 2001, 2006, 2011, 2016, 2019 (இடைத்தேர்தல்), 2021, 2026 ஆகிய சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த மாஜி முதல்வருமான கருணாநிதி 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 2011 மற்றும் 2016 என 2 முறை திருவாரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் மறைந்த நிலையில் 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் பூண்டி கலைவாணன் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.
அதன்பிறகு 2021, 2026 ஆகிய சட்டசபை தொகுதிகளில் தொடர்ந்து வென்றார் பூண்டி கலைவாணன். 2026 சட்டசபை தேர்தலில் தவெக ஆதரவு அலை வீசினாலும் கூட இந்த தொகுதியில் பூண்டி கலைவாணன் மொத்தம் 93,408 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட் தவெகவின் வீரமணி 75,260 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் பூண்டி கலைவாணன் 18,148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியில் முக ஸ்டாலின் போட்டியிட்டால் இன்னும் கூட திமுகவிற்கு வரும் ஓட்டுகள் அதிகரிக்கலாம். ஏற்கனவே தொகுதியில் உள்ள திமுகவின் பலம், முக ஸ்டாலினின் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளிட்டவற்றால் அவர் எளிதில் வெல்லாம் என்று திமுக தலைமை நினைக்கிறது. இதனால் தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய பூண்டி கலைவாணன் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications