தரம்சிங் ராஜினாமா-முதல்வராகிறார் குமாரசாமி
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் தரம்சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டசபையில் நேற்றே நம்பிக்கை வாக்கு கோரியிருக்க வேண்டிய காங்கிரஸ் முதல்வர் தரம்சிங் சட்டசபையில் அமளிநிலவுவதாகக் கூறி வாக்கு கோருவதைத் தவிர்த்துவிட்டார். இதனால் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் தொடர்பான நாடகம் இன்றும்நீடித்தது.27ம் தேதி (நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி மெஜாரிட்டியை நிரூபிக்க தரம்சிங்குக்கு ஆளுநர் கெடு விதித்திருந்தார்.ஆனால், காலையில் சட்டமன்றம் கூடியதில் இருந்தே நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் தாக்கல் செய்யாமல் தவிர்த்தார்.
மாலை வரை இழுத்தடித்தார், அப்படியே இரவும் வந்தது. தரம்சிங்கின் இந்தச் செயலால் டென்சனான பாஜக-குமாரசாமி ஆதரவுமதசார்பற்ற ஜனதா தளத்தினர் அவையில் அமளியில் இறங்கினர்.
இதையடுத்து அவையில் அமளி, துமளி நிலவுவதையே காரணமாக சுட்டிக் காட்டி நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யாமல்கிளம்பினார் முதல்வர் தரம்சிங். தரம்சிங்குக்கு ஆதரவு தெரிவிப்பது போல அவையை காலவரையின்றி ஒத்தி வைத்துவிட்டார்சபாநாயகர் கிருஷ்ணா.
இதைத் தொடர்ந்து பாஜக-குமாரசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் கொடுக்க விரைந்தனர். ஆனால்,அவர்களுக்கும் முன்பாகவே ஆளுநரை சந்தித்த தரம்சிங், மெஜாரிட்டியை நிரூபிக்க வசதியாக அவையை மீண்டும் ஒரு நாள்கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துவிட்டுத் திரும்பினார்.
இதையடுத்து 140 எம்எல்ஏக்களுடன் (ஆட்சி அமைக்க 123 பேரே தேவை) ஆளுநரை சந்தித்தார் குமாரசாமி. அவருடன் பாஜகதலைவர் எதியூரப்பாவும் சென்றார். அப்போது முதல்வர் தரம்சிங் நாடகமாடுவதாகவும், நம்பிக்கை வாக்கை சந்தித்தால் தோல்விநிச்சயம் என்பதால் காலம் கடத்துவதாகவும், தங்களை நாளையே (இன்று) ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும்கோரினார்.
இரவு 12 மணி வரை பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவதாக அவர்களிடம் கூறி அனுப்பினார் ஆளுநர்.
காங்கிரஸ் மத்தியில் முன்பு போல பலத்துடன் இருந்தால் இந்நேரம் கர்நாடக சட்டசபையை கலைத்திருக்கும். ஆனால்,நீதிமன்றங்கள் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வரும் நிலையில், தங்கள் கலைப்பு வேலையைக் காட்ட முடியாமல் காங்கிரஸ்தவித்து வந்தது.
அதே நேரத்தில் பாஜகவிடம் ஆட்சியை அவ்வளவு சீக்கிரத்தில் ஒப்படைத்துவிடக் கூடாது என்ற முடிவில் இருக்கும் காங்கிரஸ்,குமாரசாமி தரப்புக்கு முடிந்த அளவுக்கு டென்சன் தந்து பார்த்தது.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் பார்வையாளர் ஆண்டனி, எதிர்க் கட்சி வரிசையில் அமரகாங்கிரஸ் தயார் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஆளுநரை சந்திக்க தரம்சிங் கிளம்பிச் சென்றார். அப்போது மெஜாரிட்டியை நிரூபிக்க மேலும் கால அவகாசம்கோரினார் தரம்சிங். ஆனால், மேலும் கால அவகாசம் எல்லாம் தர முடியாது என ஆளுநர் சதுர்வேதி முகத்தில் அடித்தார் போலகூறிவிட்டார்.
இதையடுத்து திரும்பி வந்த சிங் ஆண்டனியுடன் ஆலோசனை நடத்திவிட்டு தனது பதவியை ராஜினாமா செய்தவாக அறிவித்தார்.இதைத் தொடர்ந்து தரம்சிங்கின் செயலாளர் ரங்கநாத் முதல்வரின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார்.
இதன் பின் நிருபர்களை சந்தித்த தரம்சிங், நான் பதவிக்காக அலைபவனோ அல்லது பதவியில் ஒட்டிக் கொண்டு திரிபவனோஅல்ல என்று வசனம் பேசினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் நேற்றே தரம்சிங் மண்ணைக் கவ்வியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஒரு வழியாக இடத்தை தரம்சிங் காலி செய்துவிட்டதால் பாஜக-குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளக்கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார்.
அந்தக் கூட்டணியின் சார்பில் நாளையோ அல்லது இன்று மாலையே கூட குமாரசாமி முதல்வராகப் பதவியேற்பார் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications