அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும்: ஜெ
சென்னை:
7 கட்சிக் கூட்டணிக்குத் தலைமை தாங்கினாலும் கூட தோல்வி பயத்தில் திமுக தலைவர் கருணாநிதி அஞ்சுகிறார், அதிமுகவைப்பார்த்துப் பயப்படுகிறார், தன்னம்பிக்கையின்றி தவிக்கிறார் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் செய்துள்ள சாதனைகள் சாதாரணமானதல்ல. அவை உலக சாதனைகள். இந்த சாதனையைப்பாராட்ட தமிழில் எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.
இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் நிலவும் நிலையைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது, விந்தையாக இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி 7 கட்சிக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறார். இருப்பினும், அவர் பயப்படுகிறார், அஞ்சுகிறார்,நடுங்குகிறார், தோல்வி பயத்தில் இருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற தன்னம்பிக்கை அவரிடம்இல்லை.
மறுபக்கம் நாம் இருக்கிறோம். கட்சி என்று பார்த்தால் அதிமுக தன்னந்தனியேதான் இருக்கிறது. ஆனால் தனிக் கட்சியாகஇருந்தாலும் மக்கள் ஆதரவு என்ற மிகப் பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம். தன்னம்பிக்கையோடு உள்ளோம்.
தன்னந்தனியே இருந்தாலும் தலை நிமிர்ந்த இருக்கிறோம், தைரியமாக இருக்கிறோம். அரசின் சாதனைகளைச் சொல்லி,செயல்பாடுகளைக் காட்டி தமிழக மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற திடமான நம்பிக்கையோடு இருக்கிறோம்.
கூட்டணியே தேவை இல்லை என்பது நமது எண்ணம் அல்ல, அந்த முடிவிலும் நாம் இல்லை. சில அரசியல் கட்சிகள் நம்மோடுபேசிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதுவரை எதுவும் முடிவாகவில்லை. நிறைய வாய்ப்புகள் உள்ளன, கூட்டணி நிச்சயம்அமையும் என்றார் ஜெயலலிதா.
கூட்டணிக்கு அதிமுகவோடு பேசி வருவது யார் என்று தெரியவில்லை. ஆனால், மதிமுக மீது திமுக தரப்புக்கு நிறையவே டவுட்உள்ள நிலையில் ஜெயலலிதாவின் பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழி நெடுக அதிமுகவினர் உற்சாகவரவேற்பு அளித்தனர்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கூட்டம் நடந்த வடபழனி விஜயசேஷ மகால் வரை வழி நெடுக மிகப்பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆங்காங்கே அரசின் சாதனைகளை எடுத்து கூறும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிமுக கொடி மற்றும்தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் ஜெயலலிதாவை வரவேற்று தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. வழிநெடுக அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.
கோடம்பாக்கம் மேம்பாலத்தில் 1,000 நாதஸ்வர கலைஞர்களுடன் மேள தாளம் முழங்க அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர். 6இடங்களில் அதிமுகவின் கொள்கைகளை விளக்கி திரை இசை நடன நிகழ்ச்சிகள் நடந்தன. ஆங்காங்கே மேடைகள் போட்டுகச்சேரி நடத்தினர். கொள்கை விளக்க பாடல்களையும், எம்ஜிஆர் பாடல்களையும் ஒலிபரப்பினர்.
வடபழனி விஜய சேஷ மகாலில் மகளிர் அணியைச் சேர்ந்த 108 பெண்கள் மஞ்சள்-பச்சை நிறத்தில் சேலை அணிந்துநின்றிருந்தனர். கூட்டத்திற்கு வருகை தந்த ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.
மண்டபத்தின் எதிரே தாரை தப்பட்டைகள், செண்டை மேளங்கள் முழங்கின. அதிமுக கொடியின் நிறத்தை குறிக்கும் வகையில்தொண்டர்களும், மகளிர் அணியினரும் கறுப்பு வெள்ளை சிகப்பு நிற ஆடை அணிந்து நின்று பலூன்களை கையில் பிடித்த படிவரவேற்பு கொடுத்தனர். கேரள பாரம்பரிய கதகளி நடனமும் இடம் பெற்றது.திமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தையொட்டிவடபழனி பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது.












Click it and Unblock the Notifications