தனித்து விடப்பட்டதால் கலக்கத்தில் பாஜக
சென்னை:
அதிமுக, திமுக கூட்டணியில் இணைந்தது போக மிச்சம் மீதியுள்ள கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி அமைக்கும் என்று அகில இந்திய பாஜக பொதுச் செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
இருக்கிற கட்சிகளை தக்க வைப்பதில் திமுகவும், அக் கூட்டணியிலிருந்து பெரிய கட்சிகளை இழுக்க அதிமுகவும் தீவிரமாக முயன்று கொண்டுள்ளன. இதில் யாராலும் கண்டு கொள்ளப்படாத ஒரு கட்சியும் உள்ளது. அது பாஜக.தனது அணிக்கு கம்யூனிஸ்டுகளையும் வைகோ அழைத்துக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கும் அதிமுக தலைமை, பாஜகவை இதுவரை கண்டுகொள்ளவில்லை. அதே போல விஜய்காந்துக்கு ஜால்ரா போட்டுப் பார்த்தார் தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன். முதலில் பாஜகவை ஆதரித்துப் பேசிய விஜய்காந்தும் இப்போது அந்தக் கட்சியை வெட்டிவிட்டுவிட்டார்.
கார்த்திக் தனித்து நின்றால் அங்கே போகலாம் என்ற பாஜகவின் திட்டத்தை திமுகவும் அதிமுகவும் சேர்ந்து குலைத்துவிட்டன. முதலில் கண்டுகொள்ளாமல் விட்ட கார்த்திக்கை தன் பக்கம் இழுக்க அதிமுக தீவிரமாக முயற்சித்தபடியே உள்ளது.
கார்த்திக்கின் தேசியத் தலைவரான பிஸ்வாஸோ திமுகவுடன் தான் கூட்டணி என்று கூறிவிட்டார்.
இதனால் தனித்துப் போட்டி என்ற சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. தனித்துப் போட்டியிடத் தயார் என்று பேசி வரும் பாஜக தலைவர்கள் கூட, அதிமுகவுடன் கூட்டணிக்கு பல வகைகளிலும் முயன்று வருகின்றனர். இதில் திருநாவுக்கரசர் மட்டுமே விதிவிலக்கு. அவர் தனித்து நிற்போம் என்கிறார். (அவருக்கு என்ன அறந்தாங்கி, புதுக்கோட்டை இருக்கு)
ஆனால், யாராலும் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் பாஜக தனியாகப் போட்டியிட வேண்டிய நிலையிலும், அவ்வாறு போட்டியிட்டால் தனது டெபாசிட்டைக் காக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதற்காக குட்டிக் குட்டிக் கட்சிகளை தனது அணிக்குக் கொண்டு வர முயல்கிறது.
இந் நிலையில், சென்னை வந்த தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தரிசனம் என்ற பெயரில் முதல் கட்ட பிரசார யாத்திரையை பாஜக மேற்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து மார்ச் 5ம் தேதி முதல் 2வது கட்டப் பிரசாரம் தொடங்கும். 20ம் தேதி முதல் முழுமையான, தீவிரமான தேர்தல் பிரசாரம் தொடங்கும்.
அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங், அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் பிரசாரத்திற்கு வரவுள்ளனர். இப்போதைக்கு 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
இருப்பினும், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் சேராமல் தனித்துப் போட்டியிடும் கட்சிகளுடன் பேசி அவர்களை எங்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்றார் தத்தாத்ரேயா.












Click it and Unblock the Notifications