கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்
சென்னை: இந்தியாவின் மிக பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பல முக்கியமான மற்றும் சென்சிடிவ் டேட்டா டார்க் வெப்பில் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், ஹேக்கிங் மூலம் டேட்டா திருடப்பட்டதை ரிலையன்ஸ் உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே அணுமின் நிலையம் என்றால் பலருக்கும் பயம் இருக்கவே செய்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பலரும் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போது தான் போராட்டங்கள் மெல்ல ஓய்ந்துள்ள நிலையில், இப்போது மிக பெரிய ஒரு பூதம் கிளம்பியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்
அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் டார்க் வெப்பில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் மிக பெரிய அணுமின் நிலையமாக இருக்கும் கூடங்குளம் குறித்த சென்சிடிவ் டேட்டா இதுபோல இணையத்தில் வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தான் முதலில் இந்த தகவலை வெளியிட்டது. அதன்படி "வேர்ல்ட் லீக்ஸ்" (World Leaks) என்ற ஹேக்கர் குழு, கூடங்குளம் அணுமின் திட்டத்துடன் தொடர்புடைய சுமார் 8.58 லட்சம் ஆவணங்களை தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளது. அவற்றில் சுமார் 19,000 ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவை டார்க் வெப்பில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு கூறியுள்ளது.
ஆவணங்கள் லீக்
அந்த ஆவணங்களில் பொறியியல் மேப், உபகரண சப்ளையர் விவரங்கள், ஆய்வு அறிக்கைகள், பாதுகாப்பு மதிப்பீட்டு ஆவணங்கள், காப்பீடு தொடர்பான டேட்டாக்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்களில் 2016 முதல் 2025 வரையிலான டேட்டாக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது தாங்கள் பாரமரித்து வந்த டேட்டாவில் ஒரு பகுதி சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் டேட்டாவை பராமரிக்க யோட்டா (Yotta) நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தோம். அந்த சர்வரில் இருந்தே டேட்டா லீக் ஆகியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம்" என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் என்ன மாதிரியான தகவல்கள் வெளியாகியுள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஆவணங்கள் உண்மையில் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் தரவில்லை.
ஏன் முக்கியம்
கூடங்குளம் அணுமின் நிலையம் தான் இந்தியாவின் மிக பெரிய அணுமின் நிலையமாகும். நாட்டின் அணுசக்தி உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டங்களில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் ஆவணங்கள் உண்மையாகவே கசிந்திருந்தால் அது மிக பெரிய ஒரு பாதுகாப்பு குறைபாடாகவே இருக்கும். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடக்கும் நிலையில், வரும் நாட்களில் இது குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
என்ன மாதிரியான ஆவணங்கள் கசிந்தது என்பது இதுவரை யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் வேர்ல்ட் லீக்ஸ் ஹேக்கர்கள் வெளியிட்ட தகவலின்படி பொறியியல் மற்றும் கட்டமைப்பு வரைபடங்கள், சப்ளையர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தொடர்பான விவரங்கள், ஆய்வு மற்றும் மதிப்பீட்டு ரிப்போர்ட், உபகரண பரிசோதனை ஆவணங்கள், காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவை லீக் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.















Click it and Unblock the Notifications