500% இல்லை.. ஆனா 100% வரி விதிப்போம்.. இந்தியாவுக்கு பெரிய சிக்கல்! செக் வைக்கும் டிரம்ப்
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500% விதிக்கும் மசோதாவில் அமெரிக்கா முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது அதிகபட்ச வரி 500%இல் இருந்து 100%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு சற்றே நிம்மதி என்றாலும் கூட 100% வரியும் கூட இந்திய பொருளாதாரத்தை முடக்கும் ஆபத்து இருக்கவே செய்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்தாண்டு அதிபராக பதவியேற்றபோது உலக நாடுகள் மீது வரிகளை அறிவித்து பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியிருந்தார். இறுதியில் அமெரிக்க நீதிமன்றம் தான் டிரம்பிற்கு வரி விதிக்கும் அதிகாரமே இல்லை என்று அதை காலி செய்தது. இதற்கிடையே மீண்டும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரி விதிக்கும் நோக்கில் அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

ரஷ்யா
இந்த மசோதாவின் உண்மையான குறி ரஷ்யா தான். அதாவது ரஷ்யாவுக்கு புதிய பொருளாதார அழுத்தத்தை உருவாக்கும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யா தடைகள் மசோதா என்ற பெயரில் மசோதாவை கண்டு வந்துள்ளனர். அதன்படி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க முடியும்.
வரி குறைப்பு
முன்னதாக, மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சி கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் புளூமென்தால் ஆகியோர் கொண்டு வந்த மசோதாவில், ரஷ்ய எரிசக்தியை வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், சற்றே நிம்மதி கொடுக்கும் வகையில் அந்த வரி விகிதம் 500%இல் இருந்து 100%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மசோதா சட்டமானால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அது பெரிய பாதிப்பையே ஏற்படுத்தும்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே இதன் பிரதான நோக்கமாகும். இதற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே ரஷ்ய அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி திட்டங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கும் நாடுகளுக்கும் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து அவர்களை ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் துண்டிக்க வைப்பதே இதன் நோக்கம். இதன் மூலம் பொருளாதார ரீதியாக ரஷ்யா தடுமாறும் என்றும் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொள்ளும் என்பதுமே அமெரிக்காவின் திட்டமாகும்!
இந்தியா
தற்போதைய சூழலில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்கும் நாடுகளாகச் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகியவை உள்ளன. எனவே இந்த மசோதா சட்டமாகும்போது அது இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். இந்த புதிய மசோதாவின் அடிப்படையில் பார்த்தோம் என்றால்.. ரஷ்ய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகள் மீது அதிகபட்சமாக 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.
அதேநேரம் இப்போது ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்கினாலும்.. அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் நாடுகளுக்கு வரியில் இருந்து விதிவிலக்கு கொடுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம். இத்தோடு சேர்த்து ரஷ்யா ரகசியமாக இயக்கும் கப்பல்கள், ரஷ்ய மத்திய வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்பதும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பிற்கு அதிகாரம்
வரி தொடர்பான முடிவுகளை எடுக்க அமெரிக்க அதிபருக்கு இதில் அதிகாரம் தரப்பட்டுள்ளது. எனவே, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்குமே வரி எனச் சொல்லிவிட முடியாது. அமெரிக்க தேசிய நலன் கருதி.. இந்தத் தடைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிகாரமும் அதிபர் டிரம்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்பு 500% ஆக இருந்த வரி ஏன் 100%ஆக குறைக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், 500% என்றால் தேவையான அனைத்து ஆதரவையும் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அதிகபட்ச வரி 100 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
