அதிமுகவுக்கு வருவோர் நல்லவர்கள்: ஜெ
சென்னை:
எல்லோருக்கும் வழி காட்ட நான் இருக்கிறேன். என்னை நம்பி வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் என்று மதிமுகவை மறைமுகமாகக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 10 ஜோடிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று திருமணம் நடத்தி வைத்தார். அப்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக மறைமுமாகப் பேசினார்.அவர் பேசுகையில், அம்மாதான் தங்கள் இல்லத் திருமணங்களை நடத்தித் தர வேண்டும் என்று அடம் பிடிக்கிற இந்த அன்புக்கு நிகராக எதைச் சொல்ல முடியும்? கழகக் கண்மணிகள் இல்லறம் ஏற்கும் திருநாள் இன்று. ஒரு வீட்டு ஆணும், இன்னொரு வீட்டுப் பெண்ணும் அமைக்கின்ற புதுக்குழுதான் இல்லறம்.
இப்படி புதுக்குழு அமைக்கும் வைபவத்தை அதிமுக பொதுக்குழு நடத்திய கையோடு நான் நடத்த வந்திருக்கிறேன். சமுதாயம் எனும் பொதுக் குழுவில் இந்த புதுக்குழுவும் இன்று இணைகிறது.
ஒரு புதுக்குழு அல்ல, பத்து புதுக் குழுக்கள் சமுதாயம் என்னும் பொதுக்குழுவில் இணைகின்ற மங்கல நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
அதிமுகவில், நல்லவர்கள் பலர், குழுக்கள் குழுக்களாக வந்து சேர்ந்து கொண்டிருக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
புரட்சித் தலைவர் கழகத்தை நிறுவினார், எல்லோருக்கும் வழி காட்டினார். இப்போது எல்லோருக்கும் வழி காட்ட நானிருக்கிறேன். வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.
மதிமுகவை மனதில் வைத்து ஜெயலலிதா இவ்வாறு பேசியபோது கலைவாணர் அரங்கமே குலுங்கும் வகையில் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.












Click it and Unblock the Notifications