ஜெ மீது கடும் அதிருப்தி: பூமராங்ஆன மாநாடு
சென்னை:
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதற்காக நடத்தப்பட்ட அரசு ஊழியர் மாநாட்டில் பறிக்கப்பட்ட சலுகைகளைத் திருப்பித் தருவதாக அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாததால் அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.
மாநாட்டுக்கு முன் இருந்ததை விட இப்போது அதிருப்தி பல மடங்காகியுள்ளது. ஜெயலிலதா அரசு பதவியேற்றது முதலே அரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே முட்டல், மோதல்கள் தீவிரமாகிவிட்டன.
![]() |
| மேடையை நோக்கி சாபமிட்ட ஊழியர்கள் |
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட பெரும் தோல்விக்கு அரசு ஊழியர் அதிருப்தியும் ஒன்றாகக் கருதப்பட்டது. இதையடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார் ஜெயலலிதா.
மேலும் அரசு ஊழியர்களுடனான மனக் கசப்பை முடிவுக்குக் கொண்டு வர ஜெயலலிதா ஆதரவாளரான சூர்யமூர்த்தி தலைமையில் இயங்கும் அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் பிரமாண்டமான அரசு ஊழியர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட அதிமுக மாநாடு போலவே நடந்த அந்த மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு ஊழியர்கள் இலவசமாக பஸ், வேன்களில் அழைத்து வரப்பட்டு, சென்னையில் உணவு, தங்குமிடம் வசதி தரப்பட்டு கவனிக்கப்பட்டனர்.
மேலும் கூட்டம் சேர்க்க மகளிர் சுய உதவிக் குழுவினரையும் அரசு ஊழியர்கள் என்ற போர்வையில் அழைத்து வந்திருந்தனர்.
சென்னையில் உள்ள அரசு ஊழியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அரசு ஊழியர்களை மாநாட்டில் பங்கேற்க அழைக்க அவர்களது குடியிருப்புக்குப் போன சூர்யமூர்த்தி கோஷ்டியினரை ஊழியர்களின் குடும்பத்தினர் அடிக்காத குறையாக விரட்டியடித்த சம்பவமும் நடந்தது.
ஒரு வழியாக அப்படி, இப்படி என்று கூட்டத்தைக் கூட்டி பிரமாண்டமான மாநாடு நடந்தாலும் பறிக்கப்பட்ட சலுகைகளை அறிவிக்காமல், துண்டு, துக்கடா சலுகைகளை அறிவித்துவிட்டுக் கிளம்பினார் முதல்வர் ஜெயலலிதா.
இதையடுத்து மாநாட்டுக்கு மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்த அரசு ஊழியர்கள் அங்கேயே தர்ணாவில் இறங்கினர். சூர்யமூர்த்தியைப் பிடித்து உலுக்க அவர்கள் கிளம்பினர். ஆனால், ஊழியர்களின் கோபத்தைப் பார்த்த சூர்யமூர்த்தி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அவரைத் தொடர்ந்து அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகளும் எஸ்கேப் ஆகிவிட, கோபத்தில் சேர்களை தூக்கி வீசினர் ஊழியர்கள்.
குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் தங்களது பணி நிரந்தரம் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்து வந்து ஏமாந்து போயினர். அவர்கள் அழுதபடியே மேடையில் இருந்தவர்களை நோக்கி அழுதபடியே சாபமிட்டனர். இவர்களுக்கு இந்த உத்தரவாதத்தைக் கொடுத்துத் தான் கூட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
| கெரோ செய்யப்பட்ட தலைமைச் செயலாளர் |
அப்போது அங்கிருந்து கிளம்பிய தலைமைச் செயலாளர் நாராயணனும் கெரோ செய்யப்பட்டார். போலீஸ் உதவியுடன் அவர் பத்திரமாக மீட்கப்பட்டு, வீட்டுக்குப் போனார்.
சூர்யமூர்த்தியும் அரசும் சேர்ந்து தங்களை நன்றாக ஏமாற்றிவிட்டதாக அரசு ஊழியர்கள் கருதுகின்றனர். இதையடுத்து அரசு சூரி தலைமையில் இயங்கும் அலுவலர் ஒன்றியத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், சங்கம் உடைப்பெடுத்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், இதையெல்லாம் மறுக்கிறது அரசு அலுவலர் ஒன்றியம்.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் எட்டு பேர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அரசு அலுவலர் ஒன்றியத்தில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை. யாரும் சங்கத்திலிருந்து விலகவும் இல்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் முத்துசுந்தரம் வதந்தி பரப்பி வருகிறார். அவரது கூற்றில் எந்த உண்மையும் இல்லை.
சமீபத்திய சென்னை மாநாட்டில் முக்கியமான 15 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இவற்றுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முதல்வரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், சத்துணவு ஊழியர்கள், பஞ்சாயத்து அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு அலுவலர் ஒன்றியம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.














Click it and Unblock the Notifications