சிஸ்டத்தையே மாற்றணும்.. ரஜினி சொன்ன அர்த்தம்.. முதல்வர் விஜய்க்கு இப்ப புரிஞ்சு இருக்கும்
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்த பின்னர், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது அடியோடு நின்றுவிட்டதா என்றால், இல்லை என்கிறார்கள் பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள். அதேநேரம் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்தவர்கள் இப்போது பல இடங்களில் புலம்புகிறார்கள். ஏனெனில் இரண்டு நாளில் அல்லது ஒரே நாளிலை பைலை மூவ் பண்ணி, ஓகே வாங்கியவர்கள், இப்போது வாரக்கணக்கில் காத்திருப்பதாக குமுறுகிறார்கள்.
தவெக ஆட்சிக்கு பின்னர் பல இடங்களில் லஞ்சம் கேட்பதாக புகாரில் மாட்டிவிட மக்கள் தொடங்கியதால், லஞ்சம் நேரடியாக கேட்க மறுக்கும் சில அரசு அதிகாரிகள், அப்ரூவல் தராமல் இழுத்தடிப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.. இந்தியன் படத்தில் கமல்ஹாசன் லஞ்சம் வாங்குவதற்கான காரணத்தை கூறுவார். காலையில் விண்ணப்பம் வாங்கி, அதனை கொடுத்து லைசென்ஸ் வாங்க 3 நாள் அலைய வேண்டும். அதற்கு வந்து போக போக்குவரத்து செலவு, விடுமுறை எடுப்பதால் போகும் சம்பளம், எல்லாவற்றையும் கணக்கிட்டு பாரு.. இது குறைவு தானே. ஒரே நாளில் வருகிறது அல்லவா என்பதாக பேசுவார்.. அரசு அலுவலகங்களில் நேர்மையாக காரியம் சாதிக்க வேண்டும் என்றால், சிஸ்டம் இப்படித்தான் அவர்களை குறைந்தது மூன்று நாட்களாவது பல விஷயங்களுக்கு அலையவிடும்.

எந்த பைலும் உடனே நகராமல் இருக்க சிஸ்டம் தான் காரணம். இந்த சிஸ்டத்தை வேகமாக நகர வைக்கவே லஞ்சம் என்ற ஒன்றை பலர் கையில் எடுத்தார்கள். என்னதான் சரியான முறையில் விண்ணப்பித்தாலும், எல்லாம் சரியாக இருந்தாலும், டிடிசிபி அப்ரூவல் தொடங்கி, பத்திரம்பதிவு, பட்டா வாங்குவது என வேலைகளுக்கு லஞ்சம் கொடுத்தால் உடனே ஓகே ஆகும் என்கிற நிலை, சில இடங்களில் ஏற்பட்டது. பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால்வேலை வேகமாக முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார்கள். நேர்மையான முறையில் விண்ணப்பித்தாலும் அலைச்சலுக்கு பயந்து பணம் கொடுத்து காரியம் சாதித்தார்கள் பலர். இதற்கு காரணம் இங்குள்ள சிஸ்டம் தான்.
இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று தான் ரஜினிகாந்த் பேசினார். சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று அரசியலுக்கு வந்தவர் தான் முதல்வர் விஜய்.. இங்கு திமுக, அதிமுக இருந்த காலத்தில் சிஸ்டம் சரியில்லை என்று விமர்சித்து வந்த முதல்வர் விஜய்யே நினைத்தாலும், அவ்வளவு எளிதாக இந்த சிஸ்டத்தை மாற்றிவிட முடியாது. ஏனெனில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது தவறு என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோன்று வேகமாக காரியம் சாதிக்க வேண்டும் என்று மக்கள் பணத்தை தருவதும் தவறு தான்.
நமக்கு முன்பு ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பார்கள் என்கிற நிலையில், நமது பைலை முதல் ஆளாக பார்த்து உடனே முடிக்க வேண்டும் என்று நினைக்கும் அவர்கள் லஞ்சம் தருகிறார்கள். அதனை வாங்கி பழக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அவர்களுக்கே முன்னுரிமை தர தொடங்கினார்கள். லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதிக்க நினைத்தால் அலைச்சலை தாங்க வேண்டிய நிலை இருக்கிறது. சில இடங்களில் லஞ்சம் கொடுத்தால் வேலை ஆகும் என்கிற நிலையும் அப்பட்டமாகவே இருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு போகும் ஏழை பெண்களிடம் வார்டு பாய் தொடங்கி நர்சு வரை எத்தனை பேர் லஞ்சம் கேட்பார்கள் என்பதை கேட்டு பாருங்கள்.. டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்காமல் விற்பனை செய்யும் ஒரு டாஸ்மாக் கடையை அதிகாரிகளால் காட்டிவிட முடியுமா... நிச்சயம் முடியாது. டிடிசிபி அப்ரூவல் தொடங்கி பத்திரம்பதிவு, பட்டா வாங்குவது வரை பல வேலைகளுக்கு லஞ்சமே கொடுக்காமல் வாங்கினேன் என்று எத்தனை பேர் சொல்ல முடியும். விஏஓ தொடங்கி தாசில்தார் வரையிலும், அரசின் அத்தனை துறையிலும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ லஞ்சம் சிஸ்டமாகவே இருக்கிறது. மேல்மட்டத்திலும் அது தொடரத்தான் செய்கிறது.
இந்த லஞ்சம், ஊழலை சரி செய்ய வேண்டும் என்றால், இந்த சிஸ்டங்களுக்கு மாற்று சிஸ்டம் கொண்டுவர வேண்டும். அதாவது சிவப்பு நாடா முறைக்கு மாற்று கொண்டு வர வேண்டும். அதனை கொண்டுவராமல் இங்கு விஜய் மட்டுமல்ல யார் வந்தாலும், லஞசம், ஊழலை ஒழிப்பது என்பது, ஓட்டை பாணியில் தண்ணீர் சேமிப்பதற்கு சமம்.
கடைசியாக சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டுவிட்டேன்.. அரசு அலுவலங்களில் லஞ்சம் வாங்க மறுப்பதாகவும் , இதனால் 2 நாளில் முடிய வேண்டிய வேலை ஒரு வாரமாக அலைய விடுகிறார்கள் என்றும் ஒருவர் பொதுவெளியில் குமுறினார். தினமும் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறினார். அலைய விடுகிறார்கள் என்றும், நாமே வலிய போய் லஞ்சம் கொடுத்தாவது விரைவாக காரியம் சாதிக்க வேண்டிய நிலை உருவாகிறது என்றும் புலம்பினார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் சிஸ்டம் எப்படி இருக்கிறது என்று.. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும், மக்களை அலைய விடுவதை தடுக்கவும் வெளிப்படையாக சிஸ்டத்தை அரசு மாற்றினால் தான் லஞ்சம் ஒழியும். அதுவரை அப்படியே தான் எந்த ரூபத்தாலாவது இருக்கும் என்பது கசப்பான உண்மை.














Click it and Unblock the Notifications