மே மாத மின் கட்டணம் ரூ.902 .. ஜூலையில் ரூ.4146.. ஆஹா என்னே வளர்ச்சி இதுவல்லவோ மாற்றம்
சென்னை: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மின் கட்டணம் தனக்கு அதிகமாக வந்துள்ளது குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவருக்கு மார்ச் மின் கட்டணம் 733 ரூபாய் வந்துள்ளது. மே மாத மின் கட்டணம் 902 ரூபாய் ஆக சற்று உயர்ந்துள்ளது. ஆனால் ஜூலை மாத மின் கட்டணம் 4,146 ரூபாய் வந்துள்ளது. இதனால் பொங்கி எழுந்துள்ள எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ஆஹா என்னே வளர்ச்சி, இதுவல்லவோ மாற்றம்...! என்று விஜய்யின் ஆட்சியை கேலி செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்ட பதிவில், "ஆஹா என்னே வளர்ச்சி, இதுவல்லவோ மாற்றம்...!
2026 மார்ச் : ரூ.733
2026 மே: ரூ.902
2026 ஜுலை: ரூ.4146
(இருபது நாட்களுக்கு மேல் ஆளில்லாத வீடு)" என்று கூறியுள்ளார். அதேபோல வேறு சிலரும் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக குற்றம்சாட்டி பதிவிட்ட வீடியோககளை காண முடிந்தது.

பொதுவாக மின் கட்டணம் திடீரென மிகப்பெரிய அளவில் உயருவதற்கு மின் கணக்கீட்டாளர் செய்யும் சில தவறுகள் காரணமாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. பொதுவாக வீட்டைப் பூட்டி வைத்திருந்த காலக்கட்டத்தில் மின்கணக்கீட்டாளர் நேரில் வந்து பார்க்கும் போது, வீடு பூட்டியிருக்கும். அப்படி பூட்டியிருந்தால் ரீடிங் எடுக்க முடியாமல் போய் விடும். அவர் உடனே தோராயமாக முந்தைய மாதங்களின் கோடைகாலப் பயன்பாட்டை கணினியில் பதிவிட வாய்ப்பு அதிகம்....
அப்படிசெய்யும் போது மின்சாரம் 500 யூனிட்டுகளை எளிதாக தாண்டும். பொதுவாக 500 யூனிட் தாண்டினார், ஒவ்வொரு யூனிட்டிற்கான கட்டணம் கடுமையாக எகிறிவிடுவது வழக்கம். அதேபோல் சிலர் ரீடிங் எடுப்பதில் சில யூனிட்டுகள் தவறாகக் கூடுதலாகக் கணக்கிட்டால் கூட மொத்த பில் தொகை 900 ரூபாயில் இருந்து நேரடியாக 4000 ரூபாய்க்கு மேல் உயரும் வாய்ப்பு உள்ளது.
நண்பர் ஒருவர் மடிப்பாக்கத்தில் வசிக்கிறார். அவர் வீடு ரீடிங் எடுக்க வந்த போது பூட்டியே இருந்தது. இத்தனைக்கும் அவர் அப்போது தான் குடிவந்தார். ஆனால் அந்த வீட்டிற்கு முன்பு குடியிருந்தவர்கள் 8000, 10000 மின் கட்டணம் செலுத்தி வந்தவர்கள். அதனால் மே மாதம் அவர்கள் போன உடன் இரண்டு மாதம் கழித்து ஜூலையில் குடிவந்த நண்பருக்கு 8000 வந்துள்ளது. நான் இப்போது தான் குடிவந்தேன்.. எப்படி இவ்வளவு கட்டணம் என்று விசாரித்த போது, வீடு பூட்டியிருந்தது. அதனால் பழைய கட்டணமே போட்டுள்ளோம் என்று கூலாக பதில் அளித்துள்ளார்கள் மின்வாரிய அதிகாரிகள். ஆனால் புதிதாக குடிவந்த நண்பருக்கு மாதம் 500 ரூபாய் கூட முன்பு இருந்த வீடுகளில் வந்தது இல்லை. அவர் வீடு பூட்டியிருந்தது என்றும், ஆள் இல்லாத அதாவது வசிக்காத வீட்டிற்கு மின் கட்டணம் தவறுதலாக கடந்த ஆண்டு கணக்கீட்டில் போடப்பட்டுள்ளதாக கடிதம் அளித்தார். ஏஇயை சந்தித்து விளக்கினார். அவர் அந்த மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்தார். இது பலருக்கும் நடந்துள்ளது.
அதேநேரம் புதிதாக ஏசி வாங்கி பயன்படுத்தி இருந்தால், ஏசி பயன்பாடு கடந்த இரண்டு மாதங்களில் வழக்கத்தைவிட ஒரு மடங்கு அதிகம் பயன்படுத்தினாலே மின் கட்டண விகிதம் காரணம் 2 அல்லது 3 மடங்கு கூட உயர வாய்ப்பு அதிகம். அதுதான் இந்த ஜூலையில் மின் கட்டணம் பலருக்கும் அதிகமாக காரணமாக இருக்கலாம். ஏனெனில் வழக்கமாக பெய்யும் தென்மேற்கு பருவ மழை சென்னையை முற்றிலும் ஏமாற்றிவிட்டது. இங்கு இன்னமும் கோடைக்காலம் நீடித்து வருகிறது. இதனால் பலர் ஏசி இல்லாமல் இரவில் தூங்க முடிவது இல்லை.. இதுவும் மின் கட்டணம் தொடர்ந்து உயர காரணமாக உள்ளது.














Click it and Unblock the Notifications