வெளி மாநில நீதிபதிகள்: கி.வீரமணி கண்டனம்
சென்னை:
தமிழக நீதிமன்றங்களில், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளையே நியமிக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சாராத நீதிபதிகளை தமிழகத்தில் நியமிப்பது சரியல்ல. இதன் மூலம் தமிழக நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள், வழக்கறிஞர்களின் உரிமை இதன் மூலம் பறிக்கப்படுகிறது.சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், தமிழ்நாடு நீதித்துறை அகாடெமியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மும்பை நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் தமிழ்நாடு சட்ட உதவி மையத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவையெல்லாம் தவறான முன்னுதாரணங்கள் ஆகும்.
தமிழகத்தில் உள்ள நீதிபதிகளைக் கொண்டே இந்தப் பதவிகளை நிரப்பியிருக்க வேண்டும். தமிழகத்தில் 20 மாவட்ட நீதிபதி பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதியை நியமித்ததற்கு வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications