241 கோவில் தேர்களை புதுப்பிக்க ஜெ உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் உள்ள 241 திருக்கோவில்களின் தேர்களை ரூ. 11 கோடி மதிப்பில் புனரமைத்து, புதுப்பிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் கலைச் சின்னங்களாக விளங்கும் திருக்கோவில்களை புனரமைத்து, திருக்குளங்களை பராமரிக்க எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.திருக்கோவில் அன்னதானத் திட்டம், திருக்கோவில் யானைகளுக்கு புத்துணர்வு பயிற்சி முகாம், திருக்கோவில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் 830 திருக்கோவில் திருத்தேர்களில் 438 மட்டுமே நல்ல நிலையில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து பழுதடைந்திருந்த 392 தேர்களில் 151 தேர்கள் புதுப்பிக்கப்பட்டன.
மீதமுள்ள 241 தேர்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது. அதில் 16 தேர்களை சம்பந்தப்பட்ட கோவில்களின் நிதியாதாரத்தைக் கொண்டு புதுப்பிக்க உத்தரவிட்டேன்.
மீதமுள்ள 225 தேர்களை, அறநிலையத்துறை லம் ரூ.10.81 கோடி மானியம் மூலம் புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், மாமல்லபுரம் சலசயன பெருமாள் கோவில், நாகூர் நாகநாதன் கோவில் உள்ளிட்ட கோவில்களின் திருத்தேர்கள் ரூ. 11 கோடி செலவில் விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications