வழக்கிலிருந்து விடுவிக்க கோரும் விஜயேந்திரர்
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி விஜயேந்திரர் மற்றும் அவரது தம்பி ரகு ஆகியோர் பாண்டிச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இவ்வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதில் எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயேந்திரர் தவிர மற்ற அனைவரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். நீதிபதி துரைப்பாண்டி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது விஜயேந்திரர் மற்றும் ரகு சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதில், இது ஒரு பொய் வழக்காகும். எனவே இதிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று இருவரும் கோரியிருந்தனர்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி துரைப்பாண்டி இதுதொடர்பாக தமிழக காவல்துறை தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு கூறி வரும் 23ம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்து வழக்கை அன்றைக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications