டெல்லிக்கு போன கூட்டணி கலாட்டா: பிரதமரிடம் வைகோ புகார்- திமுகவுக்கு 10 நாள் கெடு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகவும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கவும் வைகோ முடிவெடுத்துவிட்டதாக வெளியான செய்தியால் டெல்லி மற்றும் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோவை மையமாக வைத்து கடந்த சில மாதங்களாக திமுக கூட்டணியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொடருவாரா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பாரா என்பதை பெரும் சஸ்பென்ஸாகவே வைத்துள்ளார் வைகோ.

இதனால் திமுகவும் அதைவிட அதிமுகவும் பெரும் டென்சனில் உள்ளன. கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல்வாதியாக வைகோ மாறிப் போயிருக்கிறார் என்பது மட்டும் நிஜம்.

இந் நிலையில் திங்கள்கிழமை டெல்லி சென்ற வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது மத்தியக் கூட்டணியில் நீடிப்பதாகவும், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் பிரதமரிடம் வைகோ கூறியதாக தகவல்கள் பரவின.

குறிப்பாக பிரதமரை சந்தித்த வைகோ, அவரிடம் சில முக்கிய முடிவுகளைத் தெரிவித்ததாக சிஎன்என்-ஐபிஎன் டிவி செய்தி வெளியானது.

இந்த செய்தியால் டெல்லியிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்புச் செய்தி வைகோவின் காதுகளுக்கும் எட்டியது.

இதையடுத்து நேற்றிரவு அவர் இதுகுறித்து டெல்லியிலேயே விளக்கம் அளித்தார். கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் அளித்த விருந்தில் பங்கேற்க வந்த வைகோ கூறுகையில்,

நான் எந்த டிவி நிருபரையும் சந்திக்கவும் இல்லை. யாருக்கும் பேட்டியும் கொடுக்கவில்லை. கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் கூறவும் இல்லை. நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம்.

சமீபத்தில் கலைஞர் கூட்டிய கூட்டத்தில் கூட கலந்து கொண்டோம். அந்தக் கூட்டணி இன்று வரை தொடர்கிறது. திமுக கூட்டணியில் நீடிப்பேனா, இல்லையா என்பதற்கு ஏற்கனவே நான் பதிலளித்து விட்டேன். இதற்கு மேல் ஏதும் சொல்வதற்கில்லை. பிரதமரிடம் நான் அரசியல் பேசவே இல்லை என்றார் வைகோ.

10 நாள் கெடு:

ஆனால், பிரதமரிடம் சில முக்கியமான முடிவுகளை வைகோ தெரிவித்துள்ளதாகவும், அது திமுக கூட்டணியின் பிளவுக்கு வித்திடும் வகையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கூட்டணி உடையக் கூடாது என்று வைகோவிடம் பிரதமர் கோரிக்கை வைத்ததாகவும் அப்போது சில விஷயங்களை வைகோ மனம் விட்டுப் பேசியதாகவும் தெரிகிறது.

திமுக கூட்டணியில் தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு குறித்தும், கடந்த சட்டசபைத் தேர்தலில் கடைசி நேரத்தில் தாங்கள் கழுத்தறுக்கப்பட்டதை பிரதமரிடம் சுட்டிக் காட்டிய வைகோ, இந்த முறையும் அதேபோல நடந்தால் தொண்டர்களின் எழுச்சியையும் கட்சி உடைவதையும் என்னால் தடுக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முக்கியக் காரணமே தான் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்ததுதான். எனது முகத்தை வைத்துத்தான் திமுக கூட்டணி ஓட்டு வேட்டையாடியது. நானும் தமிழகம் முழுவதும் வெறித்தனமாக சுற்றுப்பயணம் செய்து ஓட்டு சேகரித்தேன். இதற்காக தேர்தலில் கூட நான் போட்டியிடவில்லை.

ஆனால், அப்போதும் கூட எனது கட்சிக்கு குறைந்த அளவிலான தொகுதிகளையே திமுக ஒதுக்கியது. சட்டசபைத் தேர்தலில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் அதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இப்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டால் என்னால் தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பது இயலாத காரியம் என்று வைகோ பிரதமரிடம் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஒருவேளை தான் திமுக கூட்டணியிலிருந்து விலகினாலும் கூட, மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக மாட்டேன். தொடர்ந்து மதிமுக, மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் என்பதையும் பிரதமரிடம் வைகோ தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்தியில் ஒரு கூட்டணி, மாநிலத்தில் ஒரு கூட்டணி என்பது காங்கிரஸ் கட்சிக்குப் புதிதல்ல. பீகாரில் ராம் விலாஸ் பாஸ்வானும், லாலு பிரசாத் யாதவும் எதிரெதிர் அணியில் இருந்தாலும், மத்தியில் ஒரே கூட்டணியில்தான் உள்ளனர் என்ற உதாரணத்தை பிரதமரிடம் வைகோ சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், வருகிற 25ம் தேதி வரை தான் பொறுமை காக்கப் போவதாகவும், அதற்குள் தங்களுக்குரிய தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து திமுகவிடமிருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்ப்பதாகவும், அப்படி வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை (அதிமுகவுக்கு போவது) குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் பிரதமரிடம் கூறிவிட்டு வந்துள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+