For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி தான் அடுத்த முதல்வர்: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று கலைஞர் கருணாநிதி தலைமையில் அடுத்த ஆட்சி அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

இருப்பாரா, மாட்டாரா என்ற குழப்பத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை திகிலில் உறைய வைத்திருந்த வைகோ, நான் எங்கும் போக மாட்டேன், இங்குதான் இருப்பேன் என்று கூறி அத்தனை பேரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.

குறிப்பாக கருணாநிதி அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

வைகோ நீடிக்கிறார் என்ற தகவலே, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும் மகிழ்ச்சியையும், தேர்தலில் வெற்றி உறுதி என்ற நினைப்பையும் கொடுத்துள்ளது.

இந் நிலையில் கருணாநிதியை, வைகோ அவரது சி.ஐ.டி.காலனி வீட்டில் (கோபாலபுரம் என்று நாம் குறிப்பிட்டது தவறு) சந்தித்துப் பேசினார். வீட்டு வாசலில் மத்திய அமைச்சர் ராஜா, வைகோவை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே போன வைகோ சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

வைகோவுடன் அவைத் தலைவர் கணேசனோ மற்ற தலைவர்களோ யாரும் வரவில்லை. சென்னை மாவட்ட மதிமுக செயலாளர்கள் மட்டும் வந்திருந்தனர். அவர்களும் கருணாநிதியுடன் வைகோ பேசும்போது உடனிருக்கவில்லை.

வைகோவும், கருணாநிதியும் மட்டுமே தனியாக பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டாலின், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோரும் தவிர்க்கப்பட்டனர்.

நீண்ட நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த வைகோ, படு உற்சாகமாக காணப்பட்டார். கருணாநிதியுடன் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு, கருணாநிதியுடன் சுமூகமான முறையில், நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடந்தது.

மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை, தொகுதிகளின் பெயர்கள் என்ன என்ற விவரங்களை கருணாநிதியிடம் கொடுத்துள்ளேன்.

அடுத்த கட்டமாக 26ம் தேதி மதிமுக நிர்வாகிகளுடன் தேர்தல் உத்தி, பிரசார உத்தி குறித்துப் பேசவுள்ளேன். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், மீண்டும் கருணாநிதியை சந்திப்பேன்.

எத்தனை தொகுதிகளை நாங்கள் கேட்டிருக்கிறோம் என்பதை இப்போது கூற முடியாது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர் அன்பழகன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 5ம் தேதி நடைபெறும் இறுதி நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளேன்.

இந்த மாநாடு, வரலாறு படைக்கும், சரித்திரப் பிரசித்தி பெற்ற மாநாடாக அமையப் போகிறது.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வருகிற சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார், தமிழகத்தில் நல்லாட்சி மலரும். இந்த நம்பிக்கையோடு தேர்தல் களத்தை சந்திக்கிறோம் என்றார் வைகோ.

கருணாநிதி பேட்டி:

பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது, தொடர்ந்து பேசுவோம். மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை இருவரும் சேர்ந்து பரிசீலிப்போம்.

திமுக தலைமைக் கழகமும் அதை பரிசீலிக்கும்.

எல்லாக் கட்சிகளும் பட்டியலைக் கொடுத்து விட்டன. மதிமுகவுக்கு கெளரவமான இடங்கள் வழங்கப்படும்.

பாமகவுக்கும், மதிமுகவுக்கும் சமமான இடங்கள் தரப்படுமா என்பதை இப்போது சொல்ல முடியாது.

திருச்சி மாநாட்டின்போது போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவிக்க கூடுமானவரை முயற்சிக்கிறோம். முடியும் என்று நம்புகிறோம்.

எல்லாக் கட்சிகளும் கொடுத்திருக்கின்ற எண்ணிக்கையைக் கூட்டினால் இன்னொரு சட்டசபையையே அமைத்து விடலாம். திமுகவைப் போல மற்ற கட்சிகளும் தியாகம் செய்ய முன் வருவார்களா என்ற கேள்வியில் அர்த்தம் இல்லை.

எண்ணிக்கையைக் குறைப்பது ஒன்றும் தியாகம் இல்லை. எண்ணிக்கையைக் குறைப்பது பெரிய விஷயமும் இல்லை. திமுகவைப் போல மற்ற கட்சிகளும் இருப்பார்கள் என நம்புகிறேன் என்றார் கருணாநிதி.

இடையில் நடந்த குழப்பம் குறித்து வைகோவிடம் பேசினீர்களா என்ற கேள்விக்கு, மழை விட்டு விட்டது. சேதம் ஏதும் இல்லை. எனவே மழையைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

கருணாநிதி, வைகோ சந்திப்பின்போது இரு கட்சியைச் சேர்ந்த எந்தத் தலைவரும் உடன் இல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும் கூட, கருணாநிதியும், வைகோவும் படு சந்தோஷமாக இருந்ததைக் காண முடிந்தது.

இந்திய கம்யூ. குழு சந்திப்பு:

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கருணாநிதி, அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு கருணாநிதியை சந்தித்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவில் நல்லகண்ணு, தா.பாண்டியன், பழனிச்சாமி உள்ளிட்டோர் இருந்தனர். கருணாநிதியுடன், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.

தொகுதிப் பட்டியலை கொடுத்துள்ளோம். அடுத்தடுத்துப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X