சரியான நேரத்தில் இந்தியா போட்ட டீல்.. அமீரகத்தோடு இணைந்து மாஸ்டர் பிளான்! யாரும் எதிர்பார்க்கல
துபாய்: மத்திய கிழக்கில் போரும் பதற்றமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அமீரகப் பயணம் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. வெறும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி, இந்தியா - அமீரகம் இடையேயான உறவு இப்போது அல்காரிதம், அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு என ஒரு மிகப் பெரிய வியூகமாக மாறியுள்ளது.
காசா போர், செங்கடலில் ஹவுதி படையினரின் ட்ரோன் தாக்குதல்கள், முடங்கிக் கிடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி என வளைகுடாப் பகுதி போர்க்களமாக மாறியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே கையெழுத்தான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகப் புதிய பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய்
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதில் பாதி சவூதி, ஈராக், அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. ஆனால், நமது ஒரு சிக்கல் என்னவென்றால், நம்மிடம் இருக்கும் அவசரக்கால எண்ணெய் சேமிப்பு வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. தற்போதைய சூழலில் அதுவும் 64% மட்டுமே நிரப்பப்பட்டு வெறும் 5 நாட்களுக்கான கையிருப்பு மட்டுமே உள்ளது!
அதேநேரம் சர்வதேச அளவில் பார்த்தோம் என்றால் ஜப்பான் 200 நாட்களுக்கும், சீனா 100 நாட்களுக்கும், அமெரிக்கா 413 மில்லியன் பேரல்களையும் கையிருப்பில் வைத்துள்ளன. சர்வதேச எரிசக்தி முகமை கூட 90 நாட்கள் சேமிப்பைக் கையிருப்பாக வைத்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் நுகர்வு 239 மில்லியன் மெட்ரிக் டன்னாக எகிறியுள்ள நிலையில், எமெர்ஜென்சி காலங்களைச் சமாளிக்க இந்தக் கையிருப்பு அவசியமாகிறது. கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றக் குழுவும் இந்த 90 நாள் இலக்கை எட்ட வலியுறுத்தியுள்ளது.
ரொம்ப முக்கியம்
இந்த இக்கட்டான நிலையில் தான் ADNOC-ISPRL ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் கீழ் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள அமீரகத்தின் புஜைரா (Fujairah)பகுதியில் இந்தியா தனது எண்ணெய்யைச் சேமித்து வைக்கும் உரிமையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் போர் வெடித்தாலும் இந்தியாவிற்கு எண்ணெய் சப்ளை தடைப்படாது. அத்துடன் இந்தியாவிற்குள் அவசரக்கால எரிவாயு சேமிப்பு நிலையங்களை உருவாக்கவும் இரு நாடுகளும் கைகோர்த்துள்ளன.
7,500 கிமீ நீண்ட கடற்கரை இருந்தும் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கட்டுமானத்தில் சீனா, ஜப்பான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியே இருந்தது. கடல்வழி உள்கட்டமைப்பைச் சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அதற்குப் போட்டியாகக் கொச்சின் ஷிப்யார்ட் மற்றும் டிரைடாக்ஸ் வேர்ல்ட் இணைந்து குஜராத்தின் வடினார் பகுதியில் ஒரு மிகப் பெரிய கப்பல் பழுதுபார்ப்பு மையத்தை உருவாக்கக் கையெழுத்திட்டுள்ளன. இதனுடன் மைத்ரி டிஜிட்டல் வர்த்தகப் பாதையும் உருவாக்கப்படுகிறது.
ஏஐ ரேஸ்
செயற்கை நுண்ணறிவு ரேஸில் அமெரிக்கா மற்றும் சீனாவும் தான் முன்னணியில் உள்ளது. இதற்குச் சவால் கொடுக்கும் வகையில் இந்தியா - அமீரக கைகோர்க்கிறது. இந்தியாவின் சி-டாக் (C-DAC) மற்றும் அமீரகத்தின் G42 நிறுவனம் இணைந்து இந்தியாவின் AI மிஷனின் கீழ் 8-எக்ஸாஃப்ளாப் (Eight-Exaflop) திறன்கொண்ட பிரம்மாண்ட சூப்பர் கம்ப்யூட்டிங் கிளஸ்ட்டரை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன. அமீரகத்தின் முதலீடும், இந்தியாவின் என்ஜினியரிங் திறமையும் இணைந்து இந்த டெக்னாலஜி காரிடாரை உருவாக்குகின்றன.
முதலீடுகள்
அமீரகத்தின் நிதி முதலீடுகள் இந்தியப் பொருளாதாரத்திற்குள் பாயத் தொடங்கியுள்ளன.. எமிரேட்ஸ் என்டிபி அமைப்பு இந்தியாவின் தனியார் வங்கியான ஆர்பிஎல் வங்கியில் $3 பில்லியன் முதலீடு செய்துள்ளது.. அபுதாபியின் ஏடிஐஏ அமைப்பு இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு நிதியில் $1 பில்லியன் முதலீடு செய்கிறது. ஒட்டுமொத்தமாக $5 பில்லியன் டாலர், அதாவது சுமார் ₹41,000 கோடி முதலீட்டை இந்தியாவில் அமீரகம் செய்யவுள்ளது.
வளைகுடா அரசியல்
வளைகுடா நாடுகள் தங்களுக்குள் பிளவுபட்டு வருகின்றன. சவூதி தலைமையிலான ஒபெக் அமைப்பில் இருந்து அமீரகம் வெளியேறியது அதன் எதிர்கால அரசியல் முடிவைக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமீரகம் தனது மண்ணில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவி வருகிறது. இது அங்குள்ள பாதுகாப்பு கட்டமைப்பு எவ்வளவு மாறியுள்ளது என்பதையே நமக்குக் காட்டுகிறது.. மேலும், அமீரகத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பிரதமர் மோடியும் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து, இந்தியா யுஏஇ பக்கமே நிற்கிறது என்பதை உலகிற்குக் காட்டியுள்ளார்.
இப்போது உலக அரசியல் படுவேகமாக மாறி வரும் சூழலில், இந்தியா அமீரகம் இடையே அமையும் இந்த புதிய காரிடர் இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!












Click it and Unblock the Notifications