For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர் சங்கத்தக்கு விஜய்காந்த் பை பை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சேலம் வந்த விஜயகாந்த் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தல் இன்னும் 7 மாதத்தில் வரவுள்ளது. அப்போது நான் அதில் போட்டியிட மாட்டேன்.

இனிமேல் அதற்கு போட்டியிட மாட்டேன் சார்.

தனிக் கட்சி தொடங்கி விட்டதால், யாரையும் நான் வெறுக்க மாட்டேன். எப்போதும் போல அனைவருமே எனது நண்பர்கள்தான்.

எனது கட்சியில் சினிமா நடிகர்கள் யாரும் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. வந்தால் சேர்த்துக் கொள்வேன். (விஜய்காந்த் இவ்வாறு கூறினாலும், அவரைத் தவிர சினிமா முகம் யாரும் இருக்கக் கூடாது என்பதில் கேப்டனின் மனைவி தீவிரமாக உள்ளதாக சொல்கிறார்கள், இவரது மிக நெருங்கிய சினிமா நண்பர்கள் கூட கட்சியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. எல்லா தொகுதிகளும் என்னுடைய தொகுதிதான். பண்ருட்டி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று பண்ருட்டியார் கூட பணம் கட்டியுள்ளார்.

பெண்களுக்கு இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். 50 சதவீதம் பெண் வேட்பாளர்கள் இடம் பெறக் கூடும். தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன்.

நல்லஆதரவு தெரிகிறது. தனித்தே போட்டியிடுவோம். அதில் மாற்றமே இல்லை. தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் அது வெளியிடப்படும்.

பல்வேறு கட்சிகளிலிருந்து பலர் எங்களது கட்சியில் சேரவுள்ளனர். அவர்கள் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.

நிச்சயமாக எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. தனித்தே போட்டியிடுவேன் என்றார் விஜயகாந்த்.

பின்னர் ஏன் திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு அதிமுகவை விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு, இல்லையே இரு கட்சிகளையும் தானே விமர்சிக்கிறேன் என்றார்.

பாமகவை ஏன் விமர்சிப்பதை நிறுத்திவிட்டீர்கள், பயமா என்று கேட்டதற்கு, எனக்குப் போட்டியாக அதிமுக, திமுகவையே நினைக்கிறேன் என்றார்.

தனது மனைவி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறிய விஜய்காந்த், தனது கட்சியின் சார்பில் போட்டியிட 1,600 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.

தேர்தலுக்கு நிறைய பணம் வேண்டுமே.. எப்படி சமாளிப்பீர்கள் என்று கேட்டதற்கு, லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்கத் தானே பணம் வேண்டும் என்றார்.

கட்சியில் உங்களைத் தவிர இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று யாரும் முக்கியமாக இல்லையே என்று கேட்டதற்கு, எம்ஜிஆர் இருந்தபோது யார் இருந்தார்கள்? நான் தனித்து நின்று ஜெயிக்கக் கூடாதா? சரித்திரம் படைக்கக் கூடாதா என்று சினிமா பாணியில் மன்சூர் அலிகானிடம் பேசுவது போல கேள்வி மேல் கேள்வி எழுப்பினார் நடிகர் விஜய்காந்த்.

தொண்டரிடம் சீறிய விஜயகாந்த்:

இந் நிலையில் சேலம் மாவட்டம் தெடவூர் என்ற இடத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், கூட்டத்தில் இருந்த தொண்டர் கேட்ட கேள்விக்கு கோபமாக பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், கூட்டத்தில் இருந்த ஆனந்தன் என்ற தொண்டர் திடீரென எழுந்து, திமுகவையும் எதிர்க்கிறீர்கள், அதிமுகவையும் எதிர்க்கிறீர்கள். உங்களது கொள்கைதான் என்ன, ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஆவேசமாக கேட்டார்.

இதைக் கேட்டதும் கோபமடைந்த விஜயகாந்த், அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பதிலளித்தார். இதையடுத்து ஆவேசமடைந்த மற்ற தொண்டர்கள், தலைவரைப் பார்த்து கேள்வி கேட்ட ஆனந்தனை அடிக்கப் பாய்ந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆனந்தனை அங்கிருந்து வெளியேற்றினர். தொண்டர் கேட்ட கேள்விக்கு கோபமாக விஜயகாந்த் பதிலளித்தது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்குப் பின் வேக வேகமாக பேச்சை முடித்த விஜயகாந்த் வீரகனுர் என்ற கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

கொள்கையைப் பத்தி கேள்வி கேட்டால் விஜய்காந்துக்கு ஏன் கோபம் வருது? அப்படி ஏதும் அவருகிட்ட இல்லையோ?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X