அதிமுகவை ரஜினி ஆதரிக்க வேண்டும்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது முழு ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் கோரியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாமகவுக்கு எதிராக களமிறங்கிய ரஜினியால் கொம்பு சீவி விடப்பட்டவர்கள் வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜனும், (மக்கள் கட்சித் தலைவர்) பேராசிரியர் தீரனும்.இவர்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்காக ரஜினியோடு சேர்ந்து குரல் கொடுத்ததோடு, பாமக-திமுக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், எல்லோரையும் புரட்டிப் போட்டு வெற்றியடைந்தார் டாக்டர் ராமதாஸ்.
இதையடுத்து நடராஜனையும் தீரனையும் மறந்துவிட்டு சினிமாவுக்குப் போய்விட்டார் ஜக்குபாய். ஆனால், இந்த இருவராலும் ரஜினியை மறக்க முடியவில்லை.
சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவை சந்தித்து போன மக்களளவைத் தேர்தலை நினைவூட்டிவிட்டு, இந்த முறையும் அதிமுகவுக்கு ரஜினி வாய்ஸ் தர வேண்டும் என்று கேட்டனர்.
இவர்களை ரஜினியிடம் அனுப்பி வைத்தது அதிமுக தரப்பு தான்.
ஆனால், அரசியலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட ரஜினி இந்த முறை இதுவரை யாருக்கும் பிடி கொடுக்கவில்லை. நடராஜனும் தீரனும் சத்யநாராயணாவைச் சந்தித்தபோது அவர்களுக்கு உறுதிமொழி எதையும் ரஜினி தரப்பு தரவில்லை.
இந் நிலையில் இந்த இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறோம். அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் வந்துள்ளார். தொடர்ந்து பலரும் வருவர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டிருந்தார். இந்த முறை தனது முழு ஆதரவை அதிமுகவுக்கு ரஜினி வழங்க வேண்டும்.
இதன் மூலம் பாமக, திமுக கூட்டணியை உடைக்க முடியும்.
கேபிள் டிவி சட்டத் திருத்தத்திற்கு ஆளுனர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உடனடியாக இந்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதிமுக தான் இப்போது இந்த இருவரையும் இயக்குவதாக பாமக தரப்பு கூறுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம் பெறப் போகும் இவர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications