மதிமுக கொடிகள்-வைகோ பேனர்கள் அகற்றம்
திருச்சி:
திருச்சியில், திமுக மாநில மாநாடு நடைபெறும் இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேனரை கட்ட மதிமுக தொண்டர்கள் முயன்றபோது, அதற்கு திமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் திமுக மாநில மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. மாநாடு நடக்கும் திடலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் உருவ கட்அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இந் நிலையில், மதிமுக தொண்டர்கள் தங்களது தலைவரான வைகோவின் பேனரை அங்கு எடுத்து வந்தனர். அதில் கருணாநிதியும், வைகோவும் இருப்பது போல இருந்தது. அந்த பேனரை வைப்பதற்கு அவர்கள் முயன்றபோது திமுகவினர் திரளாகக் கூடி பேனரை இங்கே வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மதிமுகவின் பம்பரச் சின்னமும் பேனரில் இருந்ததால் திமுகவினர் இதை இங்கே வைக்கவே கூடாது என்று கடுமையாக எதிர்த்தனர். இதையடுத்து மதிமுகவினர் பேனரை தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.
அதே போல கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் தாங்கள் வைத்த வைகோவின் படங்களையும், மதிமுக கொடிகளையும் திமுகவினர் அகற்றி வருகின்றனர்.
வைகோ மறுபடியும் அதிமுக கூட்டணிக்கு முயல்வதாக வந்த செய்திகளால் திமுகவினர் இச் செயலலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, வைகோ இன்று தனது குடும்பத்துடன் மதுரை புறப்பட்டுச்சென்றுள்ளார். அங்கிருந்து கலிங்கப்பட்டிக்குச் செல்கிறார்.
![]() |
| மதிமுக கொடிகள் அகற்றப்பட்ட நிலையில் தனியே நிற்கும் வைகோ தட்டி |













Click it and Unblock the Notifications