குவைத்: இந்திய தொழிலாளர்கள் போராட்டம்
குவைத்:
குவைத்தில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்தியத் தொழிலாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். முகாமின் மோசமான சூழ்நிலை காரணமாகவே அவர் இறந்ததாக கூறி அவரது உடலை எடுக்க விடாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குவைத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் 1300 இந்திய, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அடிமைகள் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்கள், முகாமில் படு மோசமான நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளனர். குடிக்கவே முடியாத மோசமான குடிநீர் தங்களுக்கு வழங்கப்படுவதாகவும், தாங்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது நிலை குறித்து பத்திரிக்கைளில் செய்திகள் வெளியான போதிலும் கூட அரசுத் தரப்பிலிருந்து ஒரு உதவியும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த பினு ஸ்டீபன் என்ற தொழிலாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறந்த ஸ்டீபனின் உடலை நிர்வாகத்தினர் எடுத்துச் செல்ல வந்தபோது, தங்களுக்கு ஒரு வழி சொல்லாமல் உடலை எடுத்துச் செல்லக் கூடாது என்று கூறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முகம்மது என்ற ஊழியர் கூறுகையில், நாங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். எங்களது வாழ்க்கைத் தரம் படு கேவலமாக உள்ளது. நல்ல சாப்பாடு கிடையாது. இங்கு பலருக்கு மலேரியா வந்துள்ளது. அதற்கு சரியான சிகிச்சை கூட தரப்படவில்லை என்று குமுறினார்.
இந்த நிலையில், முகாமில் உள்ளவர்கள் அனைவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து குவைத் நாட்டு சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த முகாமுக்கு சுகாதார இன்ஸ்பெக்டர் யாரையும் அனுப்ப நாங்கள் தயாராக இல்லை. காரணம், அவர் அங்கு போய் அவருக்கும் நோய் தொற்றி விட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கூறினார் அவர்.












Click it and Unblock the Notifications