அம்பேத்கர் சிலை அகற்றம்: சென்னையில் வன்முறை
சென்னை:சென்னை கோயம்பேடு சந்திப்பில் பாலம் அமைக்கும் பணிக்காக அங்கிருந்த அம்பேத்கர் சிலையை அகற்றி கூவம் கரையோரம் வைத்ததால் ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம்பேத்கர் பேரவையைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர். இதில் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
கோயம்பேடு சந்திப்பில் அடுக்கு மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக இப்பகுதியில் உள்ள விஜயகாந்த்தின் கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி உள்ளிட்ட பல இடங்களை நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தவுள்ளது.
மேலும், இந்த சாலையின் நடுவே உள்ள அம்பேத்கர் சிலையையும் அகற்றத் திட்டமிட்டுள்ளனர். சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்கவுள்ளதாக அறிவித்த நெடுஞ்சாலைத் துறை அதுதொடர்பான மாற்று இடத்தையும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அம்பேத்கர் பேரவை நிர்வாகிகளிடம் தெரிவித்தது.
அந்த மாற்று இடத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவுக்கு மேல் அங்கு வந்த அதிகாரிகள், சிலையை பீடத்திலிருந்து அகற்றி அருகே உள்ள கூவம் ஆற்றங்கரையில் படுக்கை வசமாக வைத்துள்ளனர்.
நேற்று காலை சிலையைக் காணவில்லையே என பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கூவம் ஆற்றங்கரையில் சிலையை போட்டு வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள், அம்பேத்கர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கே கூடினர்.
இதைத் தொடர்ந்து அங்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்களிடம் அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர். அவரது சிலையை கூவம் கரையில் எப்படி வைக்கலாம் என தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாற்று இடத்தில் சிலையை வைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூவம் கரையோரமாகவே ஒரு இடத்தை அதிகாரிகள் தொடர்ந்து கூறவே அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலுக்கு மேல் சிலையை அங்கிருந்து அகற்றி கூவம் கரையின் இன்னொரு இடத்தில் வைக்க அதிகாரிகள் முயற்சித்தனர். இதனால் ஆத்திரடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பிற தலித் அமைப்பினரும் வன்முறையில் இறங்கினர்.
அப்பகுதியில் சாலை மறியலில் குதித்தனர். இதனால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அந்தப் பேருந்துகள் மீது சரமாரியாக கற்களை வீசி கூட்டத்தினர் தாக்கினர். பேருந்துகளுக்குள் ஏறி இருக்கைகளை கிழித்தெறிந்தனர்.
இந்த கல்வீச்சில் 11 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் பல பயணிகள் காயமடைந்தனர். 2 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு அரசு பேருந்து ஓட்டுநரும் காயமடைந்தார். அவரது கண்ணில் கல் பட்டதால் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 11 விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களை போலீஸார் பிடித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications