நாளை சென்னை மாநகராட்சி மறு தேர்தல்:தேர்தல் ஆணையருக்கு நீதிமன்றம் கண்டனம்
சென்னை:ரோம் நகரம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல, சென்னை மாநகராட்சி தேர்தலில் சுனாமி போலவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, தேர்தல் ஆணையர் தனது கடமையைச் செய்யாமல் ஸ்பிங்ஸ் சிலை போல இருந்துள்ளார் என்றுசென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு கடந்த அக்டோபர் 13ம் தேதி தேர்தல் நடந்தது. அப்போது பெருமளவில் வன்முறை வெடித்தது. கள்ள ஓட்டுக்கள்சரமாரியக போடப்பட்டன, வேட்பாளர்கள், வாக்களிக்க வந்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டு தங்களுக்குவேண்டிய வேட்பாளர்களுக்கு விருப்பம் போல வாக்களித்து பெட்டிக்குள் போட்டனர் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தேர்தலை முழுமையாக ரத்து செய்து விட்டு 155 வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்தக் கோரி அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இரு விதமான தீர்ப்புகளை வழங்கியது.கலிபுல்லா வழங்கிய தீர்ப்பில் 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும், தேர்தலை முறையாக நடத்த தேர்தல் ஆணையர் தவறி விட்டார் என்றும், அவரது செயல்பாடுகள் குறித்தும் மிகக் கடுமையாகவிமர்சித்திருந்தார். காவல்துறை ஆணையர், டிஜிபி ஆகியோரையும் நீதிபதி தனது தீர்ப்பில் கண்டித்திருந்தார்.
இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக 98 வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கூட்டணி கவுன்சிலர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.53வது வார்டைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர் ஆம்ஸ்டிராங் மட்டும் ராஜினாமா செய்யவில்லை.
இந்த நிலையில் 3வது நீதிபதியாக பி.கே.மிஸ்ரா இந்த வழக்கை விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. அவரும் விசாரணை நடத்தி நேற்று மாலைதீர்ப்பு வழங்கினார். இதில் 99 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதால் அதுகுறித்து பரிசீலிக்கத் தேவையில்லை, 53வதுவார்டுக்கு மீண்டும் தேர்தல் நடத்தத் தேவையில்லை என்று அவர் உத்தரவிட்டார்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவைப் போலவே, நீதிபதி மிஸ்ராவின் தீர்ப்பிலும், தேர்தல் ஆணையரை கடுமையாக விமர்சித்துள்ளார். 3வதுநீதிபதியின் தீர்ப்பு விவரம்:
அரசியல் சட்டம் 226வது பிரிவின் கீழ் தேர்தல் நடைமுறையில், உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று பிரதிவாதிகள் சார்பில் வாதிடப்பட்டது.இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில், உயர்நீதிமன்றம் தலையிட உரிமை உள்ளது.
தவறு நடந்திருப்பது தெரியும் பட்சத்தில் தேர்தல் நடப்பதற்கு முன்பும் அல்லது தேர்தல் நடந்து முடிந்த பின்னரும் அதில் தலையிட அரசியல்சட்டப் பிரிவு 226, உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளித்துள்ளது.
எனவே அந்த சட்டப் பிரிவின் கீழ் தேர்தல் நடைமுறையில், தலையிட முடியாது என்றும், மறு தேர்தலுக்கு உத்தரவிடும் அதிகாரம் மாநிலத் தேர்தல்ஆணையத்திற்கும், தேர்தல் ஆணையருக்கும் மட்டுமே உண்டு என்று நீதிபதி முகோபாத்யாயா வழங்கிய தீர்ப்பை நான் ஏற்கவில்லை.
நேர்மையான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அப்படி இருக்கையில், தேர்தலில்முறைகேடுகள் நடந்ததாக வாக்குச் சாவடி அதிகாரிகளிடமிருந்து புகார் ஏதும் வரவில்லை என்பதற்காக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காமல்இருக்க முடியாது.
தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து வேட்பாளர்கள், பூத் ஏஜென்டுகள், பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். பத்திரிக்கைகளும் செய்திவெளியிட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக தேர்தல் ஆணையம், அரசியலமைப்புச் சட்டக் கடமையை ஆற்றத் தவறி விட்டது. தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்தேர்தல் ஆணையம் எடுத்திருக்க வேண்டும், ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை என்பதால்தான்நீதிமன்றம் தலையிட நேர்ந்தது.
ஒரு சில வார்டுகளில் மட்டும் லேசான வன்முறை நடந்திருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. உண்மையில், சுனாமியைப்போல வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் வன்முறை நடந்தது என்பதைச் சொல்ல சொர்க்கத்திலிருந்து யாரும் குதித்து வரத் தேவையில்லை. சொல்லப்போனால், தேர்தல் நாளான 13ம் தேதி சென்னை நகரத்தையே நரகமாக மாற்றி விட்டார்கள்.
தேர்தல் இயந்திரத்தை சார்ந்தவர்கள் அமைதியாக இருந்தால், அதற்கு தலைமை அமைப்பான தேர்தல் ஆணையம் கொதித்து எழுந்திருக்கவேண்டும்.
ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். அதுபோல, இவ்வளவு முறைகேடுகள்நடந்தும், தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எல்லாத் தரப்பினருமே குற்றம் சாட்டுகிறார்கள்.
தேர்தல் ஆணையர் முறையாக நடந்திருந்தால், இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்திருப்பதைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால் புகார்கள் வந்தபிறகும் கூட ஸ்பிங்ஸ் சிலை போல அமைதியாக இருந்துள்ளார் தேர்தல் ஆணையர்.
சென்னை மாநகராட்சிக்கு நேர்மையாக, முறையாைக தேர்தல் நடைபெறவில்லை என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இதைஅடிப்படையாக வைத்து மறு தேர்தலுக்கு தேர்தல் ஆணையமே உத்தரவிட்டிருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை, தனது கடமையைச்செய்யவில்லை.
எனவே நேர்மையான, நியாயமயான தேர்தல் நடைபெறவில்லை, தேர்தல் ஆணையம் தனது கடமையை ஆற்றவில்லை என்ற முடிவுக்கு இந்தநீதிமன்றம் வந்துள்ளது.
99 வார்டுகள் மட்டுமல்லாது, 155 வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருப்பதை ஏற்க முடியாது.
மறு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்ட 99 வார்டுகளில் ஏற்கனவே 98 வார்டுகளில் உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டதால் அதுகுறித்துபரிசீலிக்கத் தேவையில்லை. 53வது வார்டு கவுன்சிலருக்கு வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழை திரும்பப் பெறத் தேவையில்லை என்று தீர்ப்பில்கூறப்பட்டிருந்தது.
3வது நீதிபதியின் தீர்ப்பிலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், நாளை 67 வார்டுகளுக்கு மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications