மறு தேர்தலை எதிர்த்தும் வழக்கு: ஜெயலலிதா
சென்னை:சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு நடந்த மறு தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை மாநகராட்சிக்கு கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை, சட்டமீறல்களை, வன்முறைகளை நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லா, கடுமையாக விமர்சித்தார். இப்போது 3வது நீதிபதியான பி.கே.மிஸ்ராவும், தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரனை மிகக்கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுவரை இந்த தேர்தல் முறைகேடுகளைப் பற்றி அதிமுக சார்பில் கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை நீதிபதி மிஸ்ராதனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்த முறைகேடுகளுக்குக் காரணமானவரும், நீதிபதி மிஸ்ராவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவருமான தேர்தல் ஆணையர்சந்திரசேகரன், இன்னமும் வெட்கம் இல்லாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத முதல்வர் கருணாநிதியோ தவிக்கிறார். 2001ல் வன்முறை நடக்கவில்லையா என்று கேட்கிறார்.2001ல் தற்போது நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைப் போல ஒன்றும் நடக்கவில்லை.
அப்போது நடைபெற்ற தேர்தலின்போது இருந்த தேர்தல் ஆணையரை நான் நியமிக்கவில்லை. 1996 முதல் 2001 வரை கருணாநிதிதான்முதல்வராக இருந்தார். அப்போது அவரால் நியமிக்கப்பட்ட பி.எஸ்.பாண்டியன்தான் 2001ல் தேர்தல் ஆணையராக இருந்தார். அவர்தான்அன்றைய தேர்தலை நடத்தினார்.
அப்போது நடந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று சென்னை மேயராக பதவி ஏற்றார்.
கருணாநிதி கூறுவது போல அன்று வன்முறையும், கள்ள ஓட்டு கலாச்சாரமும் நடந்திருந்தால், ஸ்டாலின் மேயராக வெற்றி பெற்றிருக்க முடியுமா?தேர்தல் நியாயமாக நடந்தது என்பதற்கு இதை விட வேறு சாட்சியும் வேண்டுமா?
நிலைமை இப்படி இருக்க கருணாநிதி தனது வசதிக்காக இவற்றையெல்லாம் மறந்து போனது வியப்பாக இருக்கிறது. இப்போதைய பிரச்சினை2001ல் நடந்ததைப் பற்றி அல்ல. 2006ல் நடந்த ஜனநாயகப் படுகொலை பற்றித்தான்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சொன்னதை ஒட்டியே, நீதிபதி மிஸ்ரா அதை விடக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மேலும், சந்திரசேகரன்பதவியில் இருக்கக் கூடாது.
மேலும், சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்கத் தவறிய ஆணையர் லத்திகா சரண், கூடுதல் ஆணையர் ஜாங்கிட் ஆகியோரும் பதவியில் நீடிக்கக்கூடாது. அதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள். அனைவரும் பதவியில் இருந்து விலக வேண்டும்.
இதே அதிகாரிகளின் கூட்டணியோடு, 18.2.2007 அன்று நடைபெற்ற தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. எங்களைப் பொறுத்தவரையில்,நாங்கள் வைத்த நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. நாங்கள் சொன்னதையும் அவர்கள் ஏற்கவில்லை. நீதிபதிகள்தீர்ப்பையும் அவர்கள் முறையாக ஏற்கவில்லை.
மறு தேர்தலன்று வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் யாரும் வரவில்லை. இந்த மறு தேர்தலிலும் வன்முறைகளை அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பல சாவடிகளில் போலீஸ் உதவியுடன் சரமாரியாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன.
எதிர்க்கட்சி வேட்பாளர்களும், வாக்குச் சாவடிகளுக்கு சென்ற ஒரு சில பொதுமக்களும் போலீஸார் முன்னிலையில் விரட்டி அடிக்கப்பட்டதால், பலஇடங்களில் சாலை மறியல்கள் நடைபெற்றுள்ளன.
பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிக்கச் செல்லாததால், வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
83வது வார்டில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கமாலுதீனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதால் ஆத்திரமடைந்த திமுகவினர் வன்முறையில்ஈடுபட்டதுடன் , அப்பகுதியில் சென்ற பொது மக்களையும் தாக்கியுள்ளனர்.
எனவே சென்னை மாநகராட்சிக்கு அக்டோபரில் நடந்த தேர்தல், இப்போது 100 வார்டுகளுக்கு நடந்த மறு தேரத்ல் ஆகியவற்றை ரத்து செய்யவேண்டும். இவற்றை எதிர்த்து நிச்சயம் உச்சநீதிமன்றம் செல்வோம். மக்கள் ஏற்கும் ஜனநாயகம் காப்பாற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications