சட்டசபையில் அமைச்சர்கள்-அதிமுக கடும் வாதம்
சென்ைன: சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அதிமுக உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவையில் அமளி நிலவியது.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அதிமுக உறுப்பினர் வேலுமணி விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், இது அரை குறை பட்ஜெட், உப்பும் இல்லை சப்பும் இல்லை.
கூட்டுறவு கடன்கள் ரூ.6,800 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறி இருக்கிறதே தவிர மீண்டும் கடன் வழங்க தேவையான தொகை ஒதுக்கப்படவில்லை.
நிலமில்லாத 55 லட்சம் ஏழைகளுக்கு நிலம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது 71,000 ஏழைகளுக்கு 77,000 ஏக்கர் நிலம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஒருவருக்கு 2 ஏக்கர் என்றால் 2 மடங்கு அதிகமாக அல்லவா இருக்கவேண்டும்.
ரூ.2 ஒரு கிலோ அரிசி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தரமான அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. அரிசியை கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் என்றார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
சிறுபான்மையினருக்கு அறிவித்தபடி இட ஒதுக்கீடு வழங்கவில்லை. 55 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே உதவிதொகை வழங்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இப்போது காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்றார்.
இதற்கு உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளிக்கையில்,
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக இந்த ஆண்டு ரூ.150கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.713 கோடி தமிழக அரசு வழங்கியுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கொறடா கே.ஏ. செங்கோட்டையன், 4,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தமிழகத்தில் உள்ளன. இதற்கு ரூ.713 கோடி ஒதுக்கினால் எப்படி சமாளிக்க முடியும் என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த வேலு, மொத்தம் ரூ.1,153 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.
அப்போது எழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ரூ.1,235 கோடி ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் முதலில் கூறினார். இப்போது, ரூ.1,153 என்கிறார். இதில் எது சரியான தொகை என்றார்.
அப்போது எழுந்த அமைச்சர் வேலு, ரூ.1,235 கோடி ஒதுக்கப்பட்டது உண்மைதான். இதில் ரூ.1,153 கோடி தேவையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை வரும் 30ம் தேதிக்குள் கொடுக்கப்படும் என்றார்.
இதுதொடர்பாக அதிமுகவினருக்கும், அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே சூடான விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications