கருணாநிதி சொல்லித்தான் வெற்றி கொண்டான் பேசினார்ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னைவெற்றிகொண்டான் என்னைக் கடுமையாக விமர்சித்துக் கொடுத்த பேட்டியில் இடம் பெற்ற வாசகங்கள், அண்ணா அறிவாலயத்தில் தயாரித்து, திமுக தலைமையின் ஒப்புதல் பெற்ற பின்னரே சம்பந்தப்பட்ட வார இதழுக்கு அளிக்கப்பட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிகக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக, பாமக இடையிலான மோதல் இன்று உச்சகட்டத்தை அடைந்தது. திமுக தலைைமக் கழக பேச்சாளர் வெற்றி கொண்டான், டாக்டர் ராமதாஸை மோசடித் தலைவர் என்று விமர்சித்துக் கொடுத்த பேட்டியால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியின் அலுவலகத்திற்குள் எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய தட்டிகளுடன் சென்று பாமக எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை கருணாநிதி சமாதானப்படுத்தினார்.
ஆனால் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், பாமகவினரின் போக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டதாக அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று வெற்றி கொண்டான் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டார்.
இந்த நிலையில், இன்று ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக மீது மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார். ராமதாஸ் பேசுகையில், திமுக மேடைப் பேச்சாளர் வெற்றிகொண்டான் வார இதழுக்கு அளித்த பேட்டி, அறிவாலயத்தில்தான் தயாரிக்கப்பட்டது. அது அவரது பேட்டி அல்ல.
அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டு, கருணாநிதி அதற்கு ஒப்புதல் கொடுத்த பின்னரே அவர் அந்த வார இதழுக்குப் பேட்டி கொடுத்தார்.
இந்தப் பேட்டியை தயாரித்த பின்னர் வெற்றி கொண்டானிடம் கையெழுத்தும் வாங்கியுள்ளனர் (அதை செய்தியாளர்களிடம் ராமதாஸ் காட்டினார்). அதை வெற்றி கொண்டானின் மகன், (இவர் ஜெயங்கொண்டம் நகராட்சித் தலைவராக இருக்கிறார்) என்னிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக நான் விரிவாக பேச விரும்பவில்லை.
மக்களுக்கு ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த ஆட்சிக்கு ஐந்து ஆண்டு காலமும் பாமக முழு ஆதரவு கொடுக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களது உறுதிமொழியிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
இந்தப் பேட்டிக்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. என்னை மோசடித் தலைவர் என்று திமுக பேச்சாளர் கூறியபோது உடனடியாக அதற்கு கருணாநிதி வருத்தம் தெரிவிக்கவில்லை. இத்துடன் இந்தப் பிரச்சினையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். எங்களது ெபாறுப்பிலிருந்து நாங்கள் விலக மாட்டோம்.
கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடக்கும் இந்த வார்த்தைப் போர், அறிக்கைப் போரால், திமுக ஆட்சிக்கும், மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சிக்கும் எந்தப் பாதகமும் ஏற்படாது.
பாமக எம்.எல்.ஏக்கள் தலைைமச் செயலகத்தில் நடந்து கொண்டது குறித்து கருணாநிதி கூறுகையில், பாமக தனது எல்லையைத் தாண்டி வருவதாக கருணாநிதி கூறுவதை நான் ஏற்க மாட்டேன். பாமக ஒருபோதும் எல்லையைத் தாண்டாது. அப்படி நடக்கவும் மாட்டோம்.
தங்களது வருத்தத்தை முதல்வரிடம் எடுத்துக் கூறவே எங்களு எம்.எல்.ஏக்கள் அங்கு சென்றார்கள். முதல்வரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த அவர்கள் போகவில்லை. வெற்றிகொண்டான் பேச்சில் இடம் பெற்ற சில வாசகங்கள் அடங்கிய இரண்டு தட்டிகளை மட்டுமே எடுத்துச் சென்றனர்.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம், பி.டி. விதைகள், மது விலக்கு, சில்லறை வியாபாரம், மணல் குவாரி என பல பிரச்சினைகள் மக்களைப் பாதிக்க கூடியவையாக உள்ளன.
இவற்றைப் பற்றி நாங்கள் கருத்துச் சொல்வதில் என்ன தவறு உள்ளது. இவற்றுக்கெல்லாம் நாங்கள் தலையாட்ட வேண்டும் என்று திமுக விரும்புகிறதா, அப்படிச் செய்தால்தான் அவர்களுக்கு மகிழ்ச்சியா. இதுதான் கூட்டணி தர்மமா.
கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாக முதல்வர் கூட்ட வேண்டும். அங்கு மக்ககள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். போன் மூலமாக பேசலாம் என்று கருணாநிதி கூறுவதை நான் ஏற்க மாட்டேன். போனில் பேசக் கூடிய விஷயங்கள் அல்ல இவை.
நான் மறுபடியும் சொல்கிறேன். கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அளவில் சுமூக நிலை இல்லை. அதை சரி செய்ய கூட்டணி தலைவர் என்ற முறையில் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை சுமூகமாக சந்திக்க முடியும் என்றார் ராமதாஸ்.
வெற்றி கொண்டான் விவகாரத்தில் கருணாநிதியை நேரடியாக ராமதாஸ் குற்றம் சாட்டிப் பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications