மதுரை இடைத்தேர்தலில் ராஜேந்தர் கட்சி போட்டி
திருநெல்வேலி:மதுரை மேற்குத் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் லட்சிய திமுக போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
திமுகவிலிருந்து விலகிய பின்னர் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் ராஜேந்தர். பின்னர் அதைக் கலைத்து விட்டார். இடையில் மீண்டும் திமுகவில் இணைந்தார். ஆனால் உரிய கவனிப்பு கிடைக்காததால் அதிலிருந்து விலகி லட்சிய திமுக என்ற கட்சியை ஆரம்பித்தார்.
![]() |
இக்கட்சி போன சட்டசபைத் தேர்தலின்போது முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் ராஜேந்தருக்கு மட்டும் சீட் தருவதாக கூறிய அதிமுக, லட்சிய திமுகவுக்கு வேறு சீட் தர மறுத்து விட்டது. இதனால் கடுப்பான ராஜேந்தர் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக அணியில் இணைந்தார்.
சில தொகுதகிளில் போட்டியிட்ட அவர் மற்ற தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு அளித்தார். திமுக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரமும் செய்தார்.
தற்போது சன் டிவியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் ராஜேந்தர் சமீபத்தில் வீராசாமி படம் மூலம் ரசிகர்களை மிரட்டினார்.
நெல்லை வந்த ராஜேந்தர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இனி அரசியலில் தீவிர கவனம் செலுத்தவுள்ளேன். இப்போது நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை. கலைஞர் கேட்டுக் கொண்டதால் கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்காக பிரசாரம் செய்தேன்.
25 வருடமாக நான் அரசியலில் இருக்கிறேன். 3 முதல்வர்களை எதிர்த்து அரசியல் செய்துள்ளேன். பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. ஆனால் நேற்று கட்சி ஆரம்பித்த சிலர் நாளை நான்தான் முதல்வர் என்று கூறி வருகிறார்கள்.
ஊழலை ஒழிக்கப் போவதாக ஒரு நடிகர் கூறுகிறார். அவரால், அவரது வீட்டைச் சுற்றியுள்ள கொசுக்களைக் கூட ஒழிக்க முடியாது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக கலையுலகினர் போராட்டம் நடத்தினர். ஒரு நடிகர் தனது மத்திய அமைச்சர் பதவியைக் கூட ராஜினாமா செய்தார். ஆனால் இங்குள்ள தமிழ் நடிகர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பிரச்சினைக்காக வாய் திறக்காதது ஏன். அவர்களுக்கு சுய லாபம்தான் முக்கியம். நமது படம் நல்ல விலைக்குப் போகிறதா என்ற கவலை மட்டுமே அவர்களுக்கு.
மதுரை மேற்குத் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் எனது லட்சிய திமுக போட்டியிடும் என்றார் ராஜேந்தர்.
முன்னதாக ராஜேந்தரை சந்திக்க வந்த தூத்துக்குடி மாவட்ட தலைவர் மணிகண்டனுக்கும், செயலாளர் நடராஜனுக்கும் இடையே ராஜேந்தர் முன்னிலையில் பெரிய அடிதடி நடந்தது. இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதைப் பார்த்த, அங்கு கூடியிருந்த லதிமுக தொண்டர்கள் குறுக்கிட்டு இருவரையும் விலக்கி விட்டனர்.













Click it and Unblock the Notifications