அகதிகள்: புலிகள் பெயரைச் சொல்லி ஏமாற்றியதமிழக மீனவர்கள்
ராமேஸ்வரம்:கள்ளத்தனமாக இலங்கைக்கு சென்று அகதிகளிடம் அதிக அளவில் பணம் பறித்துக் கொண்டு, விடுதலைப் புலிகள் மிரட்டியதால் அவர்களை அழைத்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்த 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 3ம் தேதி 14 பெண்கள், 15 குழந்தைகள் உள்பட 41 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர். செல்வம் என்பவரின் விசைப் படகில் அவர்கள் வந்தனர். இதையடுத்து அகதிகளை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்த போலீஸார், செல்வத்திடம் விசாரித்தனர்.
அதற்கு செல்வம், நான், ராஜ், அந்தோணி சிலுவை ஆகிய மீன்வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது விடுதலைப் புலிகள் ஒரு படகில் வந்து எங்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்த 41 பேரையும் ராமேஸ்வரம் கொண்டு போய் சேர்க்குமாறு உத்தரவிட்டனர். அவர்களுக்குப் பயந்தே நாங்கள் 41 பேரையும் ராமேஸ்வரம் அழைத்து வந்தோம் என்றனர்.
முதலில் இதை போலீஸார் நம்பி விட்டனர். ஆனால் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்ட 41அகதிகளும் செல்வம் சொல்வது முழுப் பொய் என்றனர்.
நடந்தது இதுதான்:
கடந்த 3ம் தேதி செல்வத்தின் படகில் அவர், அந்தோணி சிலுவை, ராஜ், செல்வத்தின் மகன் ராஜா ஆகியோர் கடலுக்குள் சென்றனர். இந்திய எல்லையைக் கடந்து இலங்கைக்குள் நுழைந்த அவர்கள் இரணைத் தீவுக்குப் போயுள்ளனர்.
அந்தத் தீவில் ஏராளமான அகதிகள் ராமேஸ்வரம் செல்ல காத்திருந்தனர். அவர்களிடம் ராஜா போய் பேரம் பேசியுள்ளார். பின்னர் ராஜேந்திரன் என்பர் உள்ளிட்ட 10 அகதிகளிடம் ரூ. 60 ஆயிரம் பணமும், இன்னொரு குடும்பத்தினரிடம் ரூ. 30 ஆயிரம் பணத்தையும் பெற்றுக் கொண்டனர்.
மற்றொரு குடும்பத்திடம் பணம் இல்லை. இதனால் அவர்களில் ஒருவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தைப் பறித்துக் கொண்டனர். பின்னர் ஐந்து ஐந்து பேராக அழைத்துக் கொண்டு வந்து படகில் ஏற்றி ராமேஸ்வரம் கூட்டி வந்துள்ளனர்.
ஆனால் போலீஸாரிடம் விடுதலைப் புலிகள் மிரட்டியதாக கூறி நாடகமாடி விட்டனர். இதையடுத்து போலீஸார் செல்வம், ராஜ், அந்தோணி சிலுவை ஆகியோரைக் கைது செய்தனர். ராஜா தப்பி விட்டார்.












Click it and Unblock the Notifications