கேரளாவிலிருந்து புலிகளுக்கு வெடிபொருள் சப்ளை
கல்பெட்டா:கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகளிலிருந்து ஏராளமான வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு நீண்ட காலமாக சப்ளை செய்யப்பட்டு வருவதாக தமிழக கியூ பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் கடத்தப்படுவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.
இந்த நிலையில், எங்கிருந்து புலிகளுக்கு வெடிபொருட்கள் சப்ளை ஆகிறது என்பதை கண்டறியும் முயற்சியில் தமிழக கியூ பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு குழுவினர் கேரள மாநிலத்திற்குச் சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தினர். இதில், மலப்புரம், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகளிலிருந்து பெருமளவிலான வெடிபொருட்கள் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்குக் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
மலப்புரம், வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் அதிக அளவில் கிரானைட் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் சிலவற்றின் உரிமையாளர்கள்தான் வெடிபொருட்களை தமிழகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள வேறு சில நக்சலைட் அமைப்புகளுக்கும் இங்கிருந்து வெடிபொருட்கள் செல்வதாக கூறப்படுகிறது.
தமிழக, கேரள எல்லையில் உள்ள கேரள ஊரான அம்பலவாயல் என்ற இடத்தில் உள்ள குவாரி உரிமையாளரின் வீட்டில் சில நாட்ளுக்கு முன்பு தமிழக போலீஸார் ரகசிய சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த உரிமையாளர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி விட்டார்.
கேரளாவிலிருந்தும் புலிகளுக்கு வெடிபொருட்கள் சப்ளை ஆவது தமிழக போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக கேரள போலீஸாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்த தமிழக கியூ பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
