தென்னை மரத்தில் தேள் கொட்டினால்..: ஜெ, வைகோ மீது திமுக கடும் தாக்கு
சென்னை:ஜெயா டிவியில் வைகுந்தராஜனுக்கு உள்ள பங்குகள் எத்தனை? அவை பெரும்பான்மையானவையா? என்பதை பகிரங்கமாக வெளியிட தயாரா என ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்
ஆற்காடு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். அதுபோல ஜெயலலிதா அறிக்கை எழுத பேப்பரை எடுத்தால் உடனே அவரது சகோதரரும் பேனாவை கையில் தூக்கி விடுவார்.
வைகுந்தராஜன் (ஜெயா டிவி பங்குதாரர்) பற்றி காலையிலேய ஜெயலலிதா அறிக்கை. மாலையிலே வைகோ அறிக்கை. இரண்டிலும் உள்ள வாசகங்கள் ஒன்று தான்.
ஜெயா தொலைக்காட்சியின் பங்குதாரரான வைகுந்தராஜனிடம் உள்ள ஜெயா டிவி பங்குகளை விற்றுவிட வேண்டும் என்று மிரப்படுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருப்பது சாதாரண பிரச்சனையல்ல என வக்காலத்து வாங்குகிறார் வைகோ.
ஜெயா டிவியின் உண்மையான பங்குதாரர்கள் யார் யார் என்று சட்டசபையில் ஆதாரப்பூர்வமாக, வரிசையாக பட்டியல் போட்டோம். அதற்கு இந்த நிமிடம் வரை யாரும் வாயே திறக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டுள்ள வைகோவாவது அது குறித்து அறிக்கையிலேயே சொல்லியிருக்க வேண்டாமா
ஜெயலலிதாவும் வைகோவும் தங்களது அறிக்கையில் பங்குகளை குறிப்பிட்டுள்ளதால் கேட்கிறேன், ஜெயா டிவியில் வைகுந்தராஜனுக்கு உள்ள பங்குகள் எத்தனை? அவை பெரும்பான்மையானவையா?
நான் சட்டசபையில் ஜெயா டிவியின் பங்குதாரர்களின் பட்டியலை படித்தபோது பெரும்பாலான பெயர்கள் வடநாட்டு பெயர்களாக இருந்ததே தவிர, வைகுந்தராஜனுக்கு எத்தனை பங்குகள் என்று அந்த பட்டியலில் காணப்படவில்லையே, ஏன்
உண்மையில் அவர் தான் பெரும்பாலான பங்குகளுக்கு சொந்தக்காரர் என்றால் அதற்கான ஆதாரத்தை ஏன் அறிக்கையில் வெளியிட தயங்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார் ஆற்காடு.












Click it and Unblock the Notifications