நியூசிலாந்தை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா
செயின்ட் ஜார்ஜ்:உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 8 போட்டியில் நியூசிலாந்தை 215 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அடித்து நொறுக்கி நசுக்கி விட்டது.
![]() |
ஒரு காலத்தில், ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என் சவால் விட்டு சொன்னபடியே தொடர்ந்து வென்று கொண்டே இருந்தவர் பாக்ஸிங் லிஜென்ட் முகம்மது அலி. இன்று அந்த வேலையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி செய்து கொண்டுள்ளது.
தொடர்ந்து ஜெயிப்போம் என்று கேப்டன் ரிக்கி பான்டிங் சொன்னாலும் சொன்னார், சொன்னபடி பின்னி எடுத்து வருகிறது ஆஸ்திரேலிய அணி. நேற்று ஆஸ்திரேலியாவிடம் சிக்கிய அணி நியூசிலாந்து.
கிரெனடாவில் நடந்த போட்டியில் நியூசிலாந்தை கிரைண்டரில் போட்டு ஆட்டி சக்கையாகப் பிழிந்து விட்டது ஆஸ்திரேலியா. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.
கில்கிறைஸ்ட் வேகமாக அவுட் ஆகிப் போய் விட்டார். ஆனால் இன்னொரு ஓப்பனரான மாத்யூ ஹைடனும், கேப்டன் பான்டிங்கும் சேர்ந்து பல்லாங்குழி ஆடி விட்டனர். வந்த பந்தையெல்லாம் பவுண்டரிக்கு அடித்து விரட்டியும், ஒரு பந்தையும் வீணாக்காமல் ஓடி ஓடி ரன் எடுத்தும் நியூசிலாந்தை விரக்திக்குத் தள்ளி விட்டனர்.
![]() |
அபாரமாக ஆடிய ஹைடன் 100 பந்துகளில் 103 ரன்களை எடுத்து விட்டுத்தான் ஓய்ந்தார். பான்டிங் 70 பந்துகளில் 69 ரன்களை எடுத்தார்.
பின்னர் வந்தவர்களில் வாட்சன் அபாரமாக ஆடினார். 32 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ஆட்டமிழக்காமல் 65 ரன்களைக் குவித்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். மைக்கேல் கிளார்க் 49 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 348 ரன்களைக் குவித்தது.
பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர் பீட்டர் புல்டன் மட்டுமே சமாளித்து ஆடி 62 ரன்களை எடுத்தார். கேப்டன் பிளமிங் 12, டெய்லர் 3, ஸ்டைரிஸ் 27, மெக்மிலன் 1 என வரிசையாக ஆட்டமிழந்தனர்.
படு மோசமாக விளையாடிய நியூசிலாந்து அணியின் ஆட்டம் 25.5 ஓவர்களிலேயே முடிவுக்கு வந்தது. வெறும் 133 ரன்களில் ஆட்டமிழந்து, 215 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது நியூசிலாந்து.
இந்த வெற்றியின் மூலம் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆகியவற்றில் மோதிய அனைத்துப் போட்டிகளிலும் வென்று 14 புள்ளிகளுடன் ஆணித்தரமாக அரை இறுதிக்கு சென்றுள்ளது ஆஸ்திரேலியா. செயின்ட் லூசியாவில் 25ம் தேதி நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது.
10 புள்ளிகளுடன் அரை இறுதிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து 23ம் தேதி நடைபெறும் முதலாவது அரை இறுதியில் இலங்கையை சந்திக்கிறது.














Click it and Unblock the Notifications