ஜெ பாதுகாப்புக்கு துப்பாக்கி பிடிக்க தெரியாத போலீஸ்-அதிமுக
சென்னை:ஆயுதம் ஏந்த முடியாதவர்களும், பயிற்சி மறந்தவர்களும்தான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று செங்கோட்டைன் பேசுகையில், விஞ்ஞான ரீதியில் தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதியதாக இல்லை.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி விட்டது. இதை நாங்கள் கூறவில்லை. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே கடலூர் மாவட்ட எஸ்.பியிடம் இதுகுறித்துப் புகார் கூறியுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ கலைராஜன் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெடிகுண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்த முயன்றதாக அதிமுக எம்.எல்.ஏ சேகர்பாபு மீது குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டை காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது.
பெரியார் சிலையை அவமதிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். அதில் பாரபட்சமே காட்டக் கூடாது. அதேசமயம், இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் சேதப்படுத்துவதற்கும், அர்ச்சகர்கள் தாக்கப்பட்டு பூணூல் அறுக்கப்படுவது போன்ற சம்பவங்களுக்கும் என்ன காரணம் என்பதை அரசு கூற வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கான பாதுகாப்பில் குறைபாடுள் இருப்பதாக பலமுறை அதிமுக புகார் கூறி வந்துள்ளது. ஆயுதம் ஏந்த முடியாதவர்களும், பயிற்சி மறந்தவர்களும்தான் காவல் பணியில் உள்ளனர். ஜெயலலிதாவின் பாதுகாப்பில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை என்றார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications