உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியாதொடர்ந்து 3 முறை வென்று புதிய சாதனை
பிரிட்ஜ்டவுன்இலங்கையை 53 ரன்களில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3வது முறையாக ஆஸ்திரேலியா உலகக் கோப்பை சாம்பியன் ஆகியுள்ளது. உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வது இது 4வது முறையாகும்.
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று பிரிஜ்டவுன் நகரில் நடந்தது.மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்குப் பின்னர் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது.
இறுதிப் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ஆஸ்திரேலியர்கள் படு அற்புதமாக நேற்று உலகின் பிற கிரிக்கெட் அணிகளுக்கு விளக்கிக் காட்டினர்.
கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடாத கில்கிறைஸ்ட் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். அவருக்கு நேர் மாறாக அடித்து நொறுக்கி அசத்தி வந்த மாத்யூ ஹைடன் நிதான ஆட்டத்தைக் காட்டினார்.
கில்கிறைஸ்ட் படு போடு போட்டு இலங்கை பந்து வீச்சை உண்டு இல்லை என்று செய்து விட்டார். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கும், சிக்சருக்குமாக விரட்ட இலங்கை பந்து வீச்சாளர்களை விரக்தியின் விளிம்புக்குக் கொண்டு சென்று விட்டார்.
இப்படி ஒரு அடியை இதுவரை அடித்ததில்லை என்று கூறும் அளவுக்கு வெறித்தனமாக ஆடினார் கில்கிறைஸ்ட். அவரது ஆட்டத்துக்கு முன்பு இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறிப் போய் விட்டார்கள்.
படு வேகமாக ஆடிய கில்கிறைஸ்ட் அபார சதத்தைப் போட்டு அசத்தினார். சதம் போட்டும் கூட அவரது வேகம் குறையவில்லை. 104 பந்துகளைச் சந்தித்த கில்கிறைஸ்ட் 149 ரன்களைக் குவித்து விட்டுத்தான் ஆட்டமிழந்தார். அவரது ரன்களில் 8 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும்.
கில்கிறைஸ்ட்டுக்கு இது 15வது சதமாகும். உலகக் கோப்பைப் போட்டியில் இதுவே அவரது முதல் சதம். அவரும் ஹைடனும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களைச் சேர்த்தனர்.
கில்கிறைஸ்ட் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கில்கிறைஸ்ட் மரண அடி கொடுத்து ரன் குவித்தது இது முதல் முறையல்ல. 1999 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 36பந்துகளில் 54 ரன்களைக் குவித்தார். அப்போதும் ஆஸ்திரேலியாதான் சாம்பியன்.
2003ல் 48 பந்துகளில் 57 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அப்போதும் ஆஸ்திரேலியாவே சாம்பியன். ஆனால் இந்த முறை அத்தனை ஸ்கோரையும் மிஞ்சி, இலங்கை பந்து வீச்சாளர்களை பின்னி எடுத்து விட்டார்.
மாத்யூ ஹைடன் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை என்றாலும் கூட கில்கிறைஸ்ட்டின் ரன் மழைக்கு உறுதுணையாக நின்றார். ஹைடன் 38 ரன்களைச் சேர்த்தார்.
கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறப்பாக ஆடி 37 ரன்களை எடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி விட்டார்.
பின்னர் வந்த சைமண்ட்ஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 38 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 281 ரன்களைக் குவித்திருந்தது.
மிகக் கடினமான இலக்குடன் பின்னர் இலங்கை ஆட வந்தது. ஆனாலும், மலைத்துப் போகாமல் பிரமாதமாக தங்களது போராட்டத்தைத் தொடங்கினர் இலங்கை வீரர்கள்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய உபுல் தரங்காவும், ஜெயசூர்யாவும் சிறப்பாக ஆட ஆரம்பித்தனர். ஆனால் தரங்கா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஜெயசூர்யாவும், குமார சங்கக்காராவும் சேர்ந்து நிலைத்து ஆடி ரன் குவிப்பில் குதித்தனர். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 116 ரன்களைச் சேர்த்து இலங்கைக்கு நம்பிக்கை ஊட்டினர்.
ஜெயசூர்யா 63 ரன்களை எடுத்தார். சங்கக்காரா 54 ரன்கள் எடுத்தார். சங்கக்காரா ஆட்டமிழந்தபோது இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் என்ற நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால் அப்போது மழை குறுக்கிட்டது.
இதையடுத்து 36 ஓவர்களில் 269 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இலங்கை தனது போராட்டத்தைத் தொடர்ந்தது.
ஆனால் இம்முறை ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சுக்கு ஜெயவர்த்தனே (19), சமர சில்வா (21), தில்ஷான் (14) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்ததால் இலங்கை தடுமாறத் தொடங்கியது.
33வது ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் வெளிச்சம் குறைந்தது. இதனால் மீதம் உள்ள 3 ஓவர்களை நாளை வந்து ஆடலாம் என நடுவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன், இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்றே (நேற்றே) ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என இரு கேப்டன்களும் முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது. வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற நிலையிலும் கூட கடைசி வரை இலங்கை வீரர்கள் போராடிப் பார்த்தனர்.
இறுதியில், 36வது ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
புதிய சாதனைகள்
இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா வென்றுள்ள 3வது உலகக் கோப்பை இது. மேலும் இது அவர்களுக்கு 4வது கோப்பையும் ஆகும். இதுவரை எந்த அணியும் அதிக அளவு சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை.
சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதையும், ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையையும் வென்று தந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கில்கிறைஸ்ட் இந்த உலகக் கோப்பைப் போட்டியுடன் மொத்தம் 52 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். இது ஒரு புதிய சாதனை.
தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளன் மெக்கிராத், 26 விக்கெட்டுகளை இப்போட்டித் தொடரில் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டி ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாத்யூ ஹைடன் 11 போட்டிகளில் ஆடி 659 ரன்களைக் குவித்தார். இருப்பினும் கடந்த 2003 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் குவித்த 671 ரன்கள்தான் அதிகபட்ச ரன் குவிப்பாக இதுவரை உள்ளது.
கடந்த 3 உலகக் கோப்பைப் போட்டிகளில் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் கூட தோற்காத அணியாக திகழ்கிறது. கடந்த 3 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் மொத்தம் 29 போட்டிகளில் ஆடி ஒரு போட்டியிலும் அவர்கள் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் கூட ஒரு புதிய உலக சாதனை.
ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் நேற்று ஒரு சாதனை படைத்தார். அதாவது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் மட்டுமே இரண்டு உலகக் கோப்பைகளை தனது அணிக்கு வென்று கொடுத்த ஒரே வீரராக இருந்தார். அந்த சாதனையை தற்போது பாண்டிங் சமன் செய்துள்ளார்.
உலகக் கோப்பையை வெல்வதில் ஹாட்ரிக் அடித்த ஆஸ்திரேலிய அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஹோவர்ட் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா முழவதும் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications