கூட்டணி தர்மத்தை மீறிய பாஜக: கெளடா சாடல்
மங்களூர்:கூட்டணி தர்மத்தை மீறும் வகையில் பாஜக நடந்து கொள்கிறது. அரசியல் தர்மத்தை அவர்கள் கடைப்பிடிக்கத் தவறினால் திட்டமிட்டபடி முதல்வர் பதவியை அவர்களுக்குத் தர மாட்டோம் என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவருமான தேவெ கெளடா கூறியுள்ளார்.
கர்நாடக அரசியலில் பெரும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. தரம்சிங் அரசைக் கவிழ்த்த பின்னர் (இதை ஆதரிக்கவில்லை என்று முதலில் கெளடா கூறினார், பின்னர் மகன் குமாரசாமியுடன் சமரசமாகி பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் என்பது நினைவிருக்கலாம்) மதச்சார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் இணைந்து ஆட்சி அமைத்தன.
முதலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் முதல்வர் பதவியை வகிப்பது எனவும், 20 மாதங்கள் கழித்து பாஜகவுக்கு முதல்வர் பதவியை அளிப்பது எனவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. பின்னர் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார். பாஜகவின் எதியூரப்பா துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அதன்படி வருகிற அக்டோபர் மாதம் பாஜகவுக்கு முதல்வர் பதவியை மதச்சார்பற்ற ஜனதாதளம் வழங்க வேண்டும். ஆனால் திடீர் திருப்பமாக, குமாரசாமி முதல்வராக நீடிக்க ஆதரவு தருவோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. மீண்டும் மதச்சார்பற்ற ஜனதாதளமும், காங்கிரஸும் இணைந்து செயல்படும் நேரம் வந்து விட்டது எனவும் முன்னாள் முதல்வர் தரம்சிங் அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், முதல்வர் குமாரசாமியின் திட்டங்களுக்கு ஆதரவு தர பாஜக மறுத்து வருகிறது.
கூட்டணி தர்மத்திற்கு விரோதமாக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாஜகவினர் அரசியல் தர்மத்தைக் கடைப்பிடிக்கத் தவறினால் திட்டமிட்டபடி அவர்களுக்கு முதல்வர் பதவியை அளிக்க இயலாது.
தேவைப்பட்டால் மதச்சார்பற்ற ஜனதாதளமும், காங்கிரஸும் இணைந்து மக்களைச் சந்திக்கவும் தயாராக உள்ளன, தயாராகி வருகின்றன என்றார் கெளடா.
பாஜகவை கெளடா சரமாரியாக தாக்கிப் பேசியுள்ளதால் கர்நாடக அரசியல் குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications