மன்மோகன் சிங்குக்கு ராஜபக்ஷே அவசர கடிதம்
டெல்லி:பிதரமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ராஜபக்ஷேவின் செயலாளரான லலித் வீரதுங்கா அவசரமாக டெல்லி வந்துள்ளார். ராஜபக்ஷே கொடுத்த கடிதத்துடன் அவர் இந்தியா வந்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகை அதிகாரிகள் கூறுகையில், கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க இயலாது. ஆனால், இனப் பிரச்சினை தொடர்பான கடிதம் அது என்பதை மட்டும் தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் புதிய அரசியல் நிர்வாக அமைப்பை ஏற்படுத்த ஆளுங்கட்சியான இலங்கை சுதந்திராக் கட்சி பரிந்துரைத்துள்ளது. அதன்படி தற்போது உள்ள ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவு கட்ட சுதந்திராக் கட்சி பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் உள்ளது போன்ற நிர்வாக முறைக்கு மாறவும் சுதந்திராக் கட்சி பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இந்த பரிந்துரையை அனைத்துத் தமிழர் கட்சிகளும் நிராகரித்து விட்டன. இந்தப் பின்னணியில்தான் மன்மோகன் சிங்குக்கு ராஜபக்ஷே அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிபரின் கடிதத்துடன் சுதந்திராக் கட்சியின் பரிந்துரைகளின் பிரதியையும் எடுத்துக் கொண்டு வீரதுங்கா டெல்லி வந்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்பாகவும் அவர் பிரதமருடன் ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இலங்கைக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு 2டி ரேடார்களை இந்தியா இலவசமாக அளித்தது. ஆனால் இந்த ரேடார்களால் விடுதலைப் புலிகளின் விமானங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், இலங்கை பாதுகாப்புத் துறையினர் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து இந்திய நிபுணர் குழு இலங்கைக்கு சென்றுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட ரேடார்களில் என்ன பிரச்சினை என்பதை இந்தக் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். மேலும் 3வதாக ஒரு ரேடாரையும் கொடுக்க இந்தியா முன்வந்துள்ளது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க ரஷியாவிடமிருந்து மிக் 29 ரக விமானங்களை வாங்க இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த விமானங்கள் வந்து சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications