தயாநிதி திறமையான அமைச்சர்: பாஜக
ஊட்டி:தயாநிதி மாறன் திறமையான அமைச்சர், அவர் ராஜினாமா செய்ததில் மத்திய அரசு திறமையான ஒரு அமைச்சரை இழந்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்தில் ஊழியர்கள் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக தயாநிதி மாறன் உள்துறை அமைச்சரை கண்டித்ததாக கூறப்படுவதில் தவறில்லை.
பல ஆண்டுகளாக முரசொலி மாறன் மத்திய அரசின் திறமையான அமைச்சராக பணியாற்றி வந்தார். இப்போது அவரது மகன் தயாநிதி மாறனும் திறமையான அமைச்சராக செயல்பட்டார். அவர் ராஜினாமா செய்ததால் மத்திய அரசு ஒரு திறமையான அமைச்சரை இழந்துள்ளது.
அவர் மூலம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ளது. அன்னிய முதலீடுகளும் அதிகரித்துள்ளது.
மத்தியில் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெற்றும் வரும் நிலையில் அமைச்சர் நியமிப்பது, நீக்குவது குறித்து கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசிக்கும் நிலையில் பிரதமர் உள்ளார். தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் அவர் உள்ளார்.
மதுரையில் வன்முறை சம்பவத்தில் காவல்துறை எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என சிலர் கூறுவது தேவையற்றது என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications