ராஜ்யசபா தேர்தல்: ஊட்டியில் ஜெ. ஆலோசனை
கோவை:ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய ஊட்டியில் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் ஜெயலலிதா.
தமிழகத்திலிருந்து ஆறு ராஜ்யசபா காலியிடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பிக்களாக இருந்த கோகுல இந்திரா, எஸ்.எஸ்.சந்திரன், பி.ஜி.நாராயணன், காமராஜ் ஆகியோர் ஓய்வு பெறுகிறார்கள்.
நான்கு பேர் ஒய்வு பெறும் நிலையில், இரண்டு பேரை மட்டுமே தேர்வு செய்யக் கூடிய நிலையில் தற்போது அதிமுகவின் பலம் உள்ளது. அதிலும் கூட ஒரு எம்.பியைத் தேர்ந்தெடுக்க கூடுதலாக இரு எம்.எல்.ஏக்களின் ஆதரவை இழுக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் கட்சியின் வேட்பாளர் மற்றும் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரை ஊட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அழைத்துள்ளார்.
முதல் நபராக எம்.பியும், வக்கீலுமான ஜோதி கோவை விரைந்துள்ளார். அதேபோல தினகரனும் ஊட்டி கிளம்பிச் சென்றுள்ளார். இவர்கள் தவிர மேலும் சில நிர்வாகிகளும் ஊட்டி செல்கின்றனர். அவர்களுடன் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications