Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞருக்கு கை கொடுக்கும் நடிகை ராதிகா!

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுக சார்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிக்காக தொடர்களைத் தயாரித்துத் தர நடிகை ராதிகா முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகவே நேற்று முதல்வரை ராதிகா சென்று சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

சரத்குமார் திமுகவில் இருந்தபோது ராதிகாவின் கை சன் டிவியில் ஓங்கியிருந்தது. ராதிகாவின் ராடான் நிறுவனத்திற்கு அதிக அளவிலான தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், முக்கிய நேரங்களும் ராதிகா நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட்டன.

Radhika

இப்படி அசைக்க முடியாத அளவுக்கு சிறப்பிடத்தில் இருந்து வந்த ராதிகாவுக்கு, சரத்குமார் திமுகவிலிருந்து வெளியேறியபோது வேறு வழியின்றி அவரும் திமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

சரத்குமார் ஜெயலலிதாவை சந்தித்தபோது கூடவே ராதிகாவும் சென்றார். ஆனால் ஒப்புக்குத்தான் அவர் உடன் சென்றார் என்பதை அதிமுகவிலிருந்து சரத்குமார் வெளியேறியபோது தெரிய வந்தது.

திமுகவில் ராதிகா இல்லாவிட்டாலும் கூட அவருக்கும் முதல்வர் கருணாநிதிக்குமான தூய்மையான பாசம், அன்பான உறவு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இன்னும் கருணாநிதியை அப்பா என்றுதான் பாசத்துடன் அழைக்கிறார் ராதிகா.

இந்த நிலையில், சன் டிவியுடனான உறவை திமுக முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து கலைஞர் டிவி தொடங்கப்படவுள்ளது. இந்த செய்தி பரவியதும் நடிகை ராதிகா, முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திதற்குச் சென்று நேற்று சந்தித்தார்.

ராதிகாவின் இந்த திடீர் சந்திப்பு தொலைக்காட்சி வட்டாரத்தில் பெரும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியது. கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த ராதிகாவை செய்தியாளர்கள் என்ன திடீர் வருகை என்று கேட்டபோது, எனது தந்தை எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளோம். அதற்கு உங்களது ஆசியும், வருகையும் அவசியம் வேண்டும் என்று கருணாநிதியிடம் கேட்டுக் கொள்ளவே வந்தேன்.

அவரும் கண்டிப்பாக வருவதாக கூறினார். வழக்கம் போல அவரிடம் நிறைய பேசி விட்டு வந்தேன் என்றார்.

ராதிகா இப்படிக் கூறினாலும் கூட, கலைஞர் டிவி தொடர்பாகவே ராதிகா, கருணாநிதியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

டிவி தொடர் தயாரிப்பில் ராதிகாவுக்கு நிறைந்த அனுபவம் உள்ளது. சன் டிவியின் பிரபலத்திற்கு ராதிகாவின் தொடர்களும் ஒரு முக்கிய காரணம். ராதிகாவின் தொடர்கள் அதிக அளவில் சன் குழுமத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.

தொடர்கள் தவிர திருவாளர் திருமதி உள்ளிட்ட கேம் ஷோக்களையும் ராதிகா தயாரித்து வழங்கி வருகிறார்.

சன் டிவி தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சன் குழும தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களை மாற்றுவது தொடர்பாக ராதிகாவுடன் கருணாநிதி விவாதித்ததாக தெரிகிறது.

கருணாநிதியின் கோரிக்கையை சந்தோஷத்துடன் எதிர்கொண்ட ராதிகா, சன் டிவி தொடர்களை அப்படியே மாற்றினால் தனது நிறுவனத்தின் பிசினஸ் ஓரளவு பாதிக்கப்படும் என்பதை நிதானமாக எடுத்துரைத்தார்.

அதற்குப் பதில் சன் டிவியை விட சிறப்பான தொடர்களையும், கேம் ஷோக்களையும் தயாரித்து தருவதாக உறுதியளித்தாராம். அதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டாராம்.

விரைவில் கலைஞர் டிவியில் ராதிகாவின் ராடன் நிறுவன தொடர்களும், கேம் ஷோக்களும் கலக்கலாக ஒளிபரப்பாக ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் அவரது தம்பி தயாநிதி மாறன் ஆகியோர் தன்னை மிகவும் அவமானப்படுத்தும் வகையில் பேசியதாகவும், அதை திமுக தலைமை கண்டுகொள்ளாததால்தான் தான் திமுகவிலிருந்து விலகியதாகவும் முன்பு சரத்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

தனக்கு மட்டுமல்ல தனது மனைவிக்கும், மாறன் சகோதரர்கள் கடும் மிரட்டல் விடுத்தனர் என்றும் சரத்குமார் காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் சன் டிவியின் ஆதிக்கத்திலிருந்து திமுக விடுபட்டிருப்பது ராதிகாவுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. மேலும், புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கலைஞர் டிவிக்கு ராதிகா வந்தால் அந்த டிவிக்கே தனிப் பொலிவு கிடைத்து விடும் என திமுக தரப்பு கணக்குப் போடுகிறது.

ராதிகாவைப் போல மேலும் பல பிரபலங்களையும் கலைஞர் டிவிக்கு இழுக்க திமுக தரப்பு தீவிரமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+