விடுதலைப் புலிகள் அதிரடி தாக்குதல்;35 கடற்படை வீரர்கள் பலி
கொழும்பு:யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு பகுதியில் உள்ள இலங்கை கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
வான் புலிகள் பிரிவின் அதிரடித் தாக்குதலால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள இலங்கை படைகளுக்கு நேற்று நள்ளிரவு விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவிடமிருந்து பெரும் தாக்குதலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில், உள்ள கடற்படை முகாமை நோக்கி 15 கடல் புலிகள் படகுகள் விரைந்து வந்தன. அவற்றில் 3 படகுகளில் ஏராளமான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த புலிகள் அதில் இருந்தனர்.
நெடுந்தீவு முகாம் மீது புலிகள் கடும் தாக்குதலை தொடுத்தனர். அதே நேரத்தில் தரை மார்க்கமாக பீரங்கித் தாக்குதலிலும் புலிகள் குதித்தனர். இதனால் பொறியில் அகப்பட்ட எலி போல ஆனது இலங்கை கடற்படையினரின் நிலை.
விடிய விடிய இந்த சண்டை நடந்தது. காலை வரை தொடர்ந்த இந்த சண்டையின் இறுதியில், 35 கடற்படை வீரர்கள் பலியானார்கள். புலிகள் தரப்பில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் ஒரு படகும் சேதமடைந்தது.
தாக்குதலை வெற்றிகரமாக முடித்த புலிகள், கடற்படை முகாமில் இருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்களது பகுதிக்குச் சென்று விட்டனர்.
கொழும்பு குண்டு வெடிப்பில் 7 பேர் காயம்:
இந்த நிலையில் கொழும்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் நான்கு ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு நிறைந்த கொழும்பு கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப்பட்டு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வழியாக ராணுவ பேருந்து கடந்து சென்றபோது வெடிகுண்டு வெடித்து பேருந்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறின. இதில் நான்கு ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
கடற்படை முகாம் மீதான தாக்குதலும், கொழும்பு குண்டுவெடிப்பும் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications