காணாமல் போன ஹெல்மெட்டுகள்:கண்டுகொள்ளாத காவல்துறை
சென்னை:கட்டாய ஹெல்மட் திட்டத்தை 3வது நாளிலேயே சென்னை நகரவாசிகள் பலர் காற்றில் பறக்க விட்டு விட்டனர். முதல்வரின் பிறந்த நாளும் அதுவுமாக யாரையும் பிடிக்க வேண்டாம் என்று காவல்துறையும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.
ஜூன் 1ம் தேதி முதல் கட்டாய ஹெல்மட் திட்டம் சென்னை உள்ளிட்ட ஆறு மாநகரங்களில் அமலுக்கு வந்துள்ளது. முதல் நாளன்று, ஹெல்மட் அணியாமல் டூ வீலர்களில் பயணித்த ஆயிரக்கணக்கானவர்களைப் பிடித்து அபராதம், மொபைல் நீதிமன்றங்களில் வழக்கு போட்டு போலீஸார் அலைக்கழித்தனர்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது. குறிப்பாக பெண்கள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியுமுற்றனர். இதையடுத்து முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை விட்டார். இதில் ஹெல்மட் திட்டத்தை மிகக் கடுமையாக அமல்படுத்திட வேண்டாம் என போலீஸாருக்கு அறிவுரை கூறியிருந்தார்.
இதையடுத்து 2வது நாளன்று ஹெல்மட் போடாமல் வந்தவர்களை நிறுத்தி எச்சரிக்கை செய்ததோடு போலீஸார் விட்டு விட்டனர். ஆனால் 3வது நாளான நேற்று நிலைமை தலைகீழாக காணப்பட்டது.
ஹெல்மட் போடாமல் வந்தவர்களை போலீஸார் தடுக்கவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. சென்னை நகரில் வழக்கா சிக்னல் தோறும் நிற்கும் போக்குவரத்தை போலீஸாரைக் கூட நேற்று காண முடியவில்லை. ஹெல்மட் போடாமல் போனவர்கள் இதனால் சந்தோஷமாகி விட்டனர்.
சென்னை நகரில் நேற்று ஹெல்மட் போடாமல் போன ஒருவருமே பிடிபடவில்லை, தடுக்கப்படவும் இல்லை.
இதற்கு முதல்வரின் அறிவுரை ஒரு காரணமாக இருந்தாலும் இன்னொரு முக்கியக் காரணமும் இருந்தது. அது, நேற்று முதல்வரின் பிறந்த நாள். இந்த நாளில் ஹெல்மட் போடாமல் போனவர்களைப் பிடிக்க வேண்டாம் என்று காவல்துறையினர் முடிவு செய்து விட்டார்களோ என்னவோ.
மொத்தத்தில் கட்டாய ஹெல்மட் திட்டம் அமலுக்கு வந்த 3வது நாளிலேயே சொதப்பி விட்டது என்றுதான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications