சோதனை புரளி: ஜெ. வீட்டின் முன் தொண்டர்கள் கூட்டம்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் மற்றும் சிறுதாவூர் பங்களாவில் போலீஸ் சோதனை நடக்கவிருப்பதாக நேற்றிரவு தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டு விடிய விடிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஜெயலலிதா நேற்றிரவு ஹைதராபாத் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், அவருடைய போயஸ் கார்டன் மற்றும் சிறுதாவூர் பங்களாக்களில் அதிகாலையில் சோதனை நடக்க இருப்பதாக தகவல் பரவியது.
இதையடுத்து தென் சென்னை மாவட்டச் செயலாளர் கலைராஜன் அதிமுகவினரை திரட்டிக் கொண்டு போயஸ் கார்டன் வந்தார். தகவல் அறிந்த பல தொண்டர்களும் திரண்டு வந்தனர். மகளிர் அணியை சேர்ந்தவர்களும் குவிந்துவிட்டனர்.
இரவு முழுவதும் பங்களாவின் முன் தூங்காமல் கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். நடுரோட்டிலிலேயே அமர்ந்திருந்தனர். இதனால் கதீட்ரல் சாலையிலும் போயஸ் கார்டன் செல்லும் சாலையிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால் பங்களாவிற்கு முன் போலீஸார் வரவில்லை.
இன்று காலையில் இந்த தகவல் அறிந்து மேலும் தொண்டர்கள் கூட்டம் கூடியது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், கழக நிர்வாகிகள் ஜெயகுமார், சுலோசனா சம்பத், வழக்கறிஞர் ஜோதி எம்எல்ஏ சேகர் பாபு உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் திரண்டனர்.
இதே போல் சிறுதாவூர் பங்களா முன்பும் ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கூடினர். காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் தொண்டர்கள் அங்கு திரண்டனர்.
ஆனால் இரு இடங்களிலும் எந்தச் சோதனையும் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications