நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ.
சென்னை:எனக்கு 59 வயதாகிறது. எனது வாழ்நாளில் ஒருமுறை கூட மதுவைத் தொட்டதில்லை, எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தலைமைக் கழகத்தை இடிப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து கண்ணியம் இல்லாமல் பேசி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
சைதாப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில், கருணாநிதி பேசுகிறபோது, சிலேடையாகப் பேசியுள்ளார். தற்போது கேள்வி, பதில் பேட்டியில், கழகத்தை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி என்ற கேள்விக்கு நேற்று கொஞ்சம் அதிகமாகி விட்டது போலும், அதாவது கோபம் என்று பதில் சொல்லியிருக்கிறார்.
இதற்கான விளக்கங்களை நீதிமன்றத்தில் சொல்ல வாய்ப்பில்லாததால், இந்த அறிக்கையில் விளக்குகிறேன். எனக்கு 59 வயதாகிறது. இன்று வரை எனது வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டது கிடையாது. எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும், என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்னுடைய இல்லப் பணியிலோ, அலுவலகப் பணியிலோ இருக்க முடியாது என்பதும் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம்.
தலைமைக் கழகத்தைப் பற்றி நான் பேசினால் அதற்கு சம்பந்தமே இல்லாத கொடநாடு எஸ்டேட் குறித்துப் பேசுகிறார் கருணாநிதி. அதுனுடன் என்னைத் தொடர்புப்படுத்திப் பேசுகிறார். 50 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், 90 அறைகள் உள்ளன என்றும் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்.
அந்தக் கட்டடம் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவும் இல்லை, அதில் 90 அறைகளும் இல்லை. அங்கு கட்டப்படுகின்ற கட்டடத்திற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
பெண் என்றும் பாராமல் என்னைப் பற்றி கருணாநிதி பேசியும், எழுதியும் வருவதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
முன்பு விஜயகாந்த்தை குடிகாரர், குடித்து விட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று படு காட்டமாக விமர்சித்திருந்தார் ஜெயலலிதா. இதற்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த், அவர்தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தாரா என்று தடாலடியாக அறிக்கை விட்டார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மீதே அந்த அஸ்திரம் கருணாநிதி மூலமாக திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications