லாட்டரி மார்ட்டினுக்கு முன் ஜாமீன் மறுப்பு
சென்னை: கோவையைச் சேர்ந்த லாட்டரிச் நிறுவன அதிபர் மார்ட்டின் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் தமிழகத்தில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தமிழகத்தின் பல பகுதிளில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், மார்ட்டின்தான் இந்த லாட்டரிச் சீட்டுக்களை விநியோகம் செய்து வருகிறார் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மார்ட்டின் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரது கோவை, சென்னை வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். மேலும் அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து தலைமறைவான மார்ட்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வழக்கில் தொடர்புடைய நிலையில், வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாததால் முன் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கப் படக் கூடும். எனவே மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
இதையடுத்து மார்ட்டினை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications