தேர்தல் முன்விரோதத்தில் ரயில்வே ஊழியர் படுகொலை
திருவள்ளூர்: திருவள்ளூரில் தேர்தல் முன்விரோதம் தொடர்பாக நடந்த மோதலில் ரயில்வே ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
திருவள்ளூர் அருகே பாகசாலையை சேர்ந்த மரியதாஸ் (54), ரயில்வேயில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
நேற்றிரவு இவருடைய பேரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனால் வீடே குதூகலமாக இருந்தது. அந்த சமயத்தில், 2 டாடா சுமோ கார்களில் ஒரு மர்ம கும்பல் வந்தது.
வீட்டிற்குள் புகுந்த அந்தக் கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் மரியதாஸ் தலையில் வெட்டு விழுந்து, சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக பலியானார்.
அவருடைய மகன்கள் மற்றும் உறவினர்கள் 8 பேருக்கு கை,கால், கழுத்து என பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. கொலை வெறித் தாக்குதலை முடித்துக் கொண்ட அக்கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், திருத்தணி டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில், தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருப்பது தெரியவந்தது.
பாகாசாலை பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சம்பத்தும், அவரை எதிர்த்து சுப்ரமணி என்பவரும் போட்டியிட்டனர். மரியதாஸ் சம்பத்திற்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்டார். இத்தேர்தலில் சம்பத் வெற்றி பெற்றதால் எதிர் கோஷ்டிக்கும் மரியதாஸுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் பொன்னன் குளத்தில் நடந்த திருவிழாவில் மரியதாஸின் மகன் உறவினருடன் சென்றிருந்தபோது, சுப்ரமணி ஆதரவாளர்கள் அவர்களை தாக்கினர். அதனால் இரு தரப்பினரும் மோதி கொண்டனர்.
இந்த நிலையில் மரியதாஸ் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 12 பேரைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications