ஓமனை தாக்கிய கோனு புயல்
மஸ்கட் (ஓமன்):கோனு என பெயரிடப்பட்ட புயல், ஓமன் நாட்டின் கிழக்குக் கடற்கரையை இன்று அதிகாலை தாக்கியது. இதையடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் உருவான கோனு புயல், வட மேற்காக நகர்ந்து, ஓமன் நாட்டின் கிழக்கில் உள்ள சுர் மற்றும் ரா ஆகிய பகுதிகளின் கடற்கரையை அடைந்தது.
![]() |
பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழையும் பெய்ததால் அந்தப் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை இந்தப் புயல் கரையைக் கடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.
இருப்பினும், சுர் மற்றும் ரா ஆகிய நகரங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புயல் காரணமாக தலைநகர் மஸ்கட் உள்ளிட்ட பல நகரங்களில் கன மழை பெய்து வருகிறது.
புயல் காரணமாக மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், 12 மீட்டர் அளவுக்கு கடல் அலைகளும் எழுந்தன. ஓமன் நாட்டில் எழுந்த புயல்களிலேய மிகவும் மோசமான புயல் இதுதான் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக ஓமனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அல் ஹலானியத், மசிரா தீவுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அப்பகுதிகளில் உச்சகட்ட அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்படும் என்பதால் வயர்லஸ் மற்றும் சாட்டிலைட் போன்களுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைய மேற்கொண்டுள்ளது.
கடந்த 1890ம் ஆண்டு ஓமனைத் தாக்கிய புயலில் 700 பேர் பலியானார்கள். அதன் பின்னர் எழுந்துள்ள மோசமான புயல் கோனுதான் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications