திமுக அழிக்க யாராலும் முடியாது: மு.க.ஸ்டாலின்
திருப்பத்தூர்: அரசியலில் சகாப்தமாக திகழ்ந்த மாபெரும் தலைவர்களால் கூட திமுகவை அழிக்க முடியவில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூரில் புதிதாக கட்டப்பட்ட அணையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் திருப்பத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
ஸ்டாலின் பேசுகையில், ஓட்டு போட்ட மை அழிவதற்குள் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார். ஓய்வில்லாமல் உழைத்து சாதனைகள் படைத்து வருகிறார்.
இதனை பொறுக்க முடியாத ஜெயலலிதா தினம் ஒரு தரம் தாழ்ந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறார். திமுகவை அழிப்பேன் என கூறி வருகிறார். யார் வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது. வரலாற்றில் இடம் பிடித்த அரசியல் சகாப்த தலைவர்களால் கூட திமுகவை அழிக்க முடியாமல், அழிக்க நினைத்தவர்களே அழிந்து போனார்கள்.
கோட நாடு பகுதியில் கட்டிடங்கள் கட்ட கூடாது என தடை இருந்தும் 900 ஏக்கர் பரப்பில் 95 அறைகள் கொண்ட பங்களா எந்த விதமான அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ளது. அந்த வழியாக அந்தப்பகுதி பஞ்சாயத்து தலைவர் சென்ற போது அவரை அனுமதிக்கவில்லை.
அதனால் அவர் கோபமடைந்து அந்த பங்களா குறித்து விசாரணை நடத்தியபோது அனுமதியின்றி கட்டப்பட்டது தெரியவந்தது. அதுகுறித்து அவர் அரசுக்கு தகவல் அனுப்பினார். அதன்படி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அந்த பங்களாவிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை கூறியுள்ள ஜெயலலிதா, தன் வருமான வரி கணக்கில் கோடநாடு பங்களாவை காட்டியுள்ளார். இதன் மூலம் அவருக்கும் அந்த பங்களாவிற்கும் சம்பந்தம் உள்ளது உறுதியாகியுள்ளது.
கோடநாடு பங்களாவை பற்றிய செய்திகளை மறைப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தை இடிக்க நோட்டீஸ் விவகாரத்தை எழுப்பி நாடகம் போடுகிறார்.
நாட்டை குட்டி சுவராக்கும் விதத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார். ஆனால் முதல்வர் கருணாநிதி 84 வயதில் தள்ளாத நிலையிலும் தமிழகம் தள்ளாடிவிடக் கூடாது என்பதற்காக தினமும் 22 மணிநேரம் உழைத்து வருகிறார் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications