3வது அணிக்கு எதிர்காலம் கிடையாது: ராமதாஸ்
திண்டிவனம்:3வது அணிக்கு இந்திய அரசியலில் எதிர்காலமே கிடையாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் இன்று பேசினார். அப்ேபாது அவர் கூறுகையில், மக்களால் தோற்கடிக்கப்பட்ட 8 கட்சிகள் இணைந்து 3வது அணியை உருவாக்கியுள்ளன. இந்த அணிக்கு எதிர்காலமே கிடையாது.
முன்பு முன்னாள் பிரதமர் வி.பி. சிங் தலைமையில், 3வது அணிக்கான முயற்சிகள் வெற்றி பெற்றன. காரணம் அவருக்குப் பின்னால் பெரும் மக்கள் பலம் இருந்தது. இதனால்தான் அவரால் வெல்ல முடிந்தது.
ஆனால் தற்போது கூட்டு சேர்ந்து கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு கிடையாது. எனவே இவர்களால் 3வது அணியை வெற்றிகரமாக நடத்த முடியாது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் தொடர்ந்து பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அணையின் உயரத்தைக் கூட்டினால் கேரளாவில் உள்ள 5 மாவட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் என அவர் கூறுவது தவறான தகவல். முல்லைப் பெரியாறு அணைக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்படுமானால் கூட இடுக்கி அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.
சில்லறை வணிகத்தில் பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுக்க இடது சாரிக் கட்சிகளுடன் இணைந்து பாமக போராட்டம் நடத்தும். இதுதொடர்பாக சிபிஎம் தலைவர் பிரகாஷ் காரத் பாமகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
கல்வி வியாபாரமாவதை தடுக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். தற்போது தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை வியாபாரிகளின் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
அரசுகளையும், நீதிமன்றங்களையும் மிரட்டும் வகையில் இவர்கள் செயல்படுகிறார்கல். பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏழைகளுக்கு கல்வி தர மறுக்கின்றன.
கல்விக் கொள்ளையைத் தடுக்க கல்வித்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை எதிர்த்து பாமக பெரும் போராட்டத்தில் குதிக்கும்.
ஈழத்தில் தமிழர்கள் பெரும் பட்டினிச் சாவில் சிக்கியுள்ளனர். அவர்களைக் காக்க மத்திய அரசு உதவ வேண்டும். இலங்கைக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆயுதங்களை வழங்கக் கூடாது.
இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. ஈழத் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். உணவு, மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். தமிழர் பகுதிகளில் பெரும் பட்டினிச் சாவுகள் நிகழக் கூடிய ஆபத்து உள்ளதாக ஐ.நா.வும் எச்சரித்துள்ளது.
இந்திய மீனவர்களைக் காக்க கூட்டு ரோந்து செல்லலாம் என்று இலங்கை கூறுவதை இந்தியா ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications