காஞ்சிபுரம்: சரபோஜி மன்னர் பரம்பரையைசேர்ந்த அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு
காஞ்சிபுரம்:சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த, தொல்பொருள்துறை போர்மன் வீட்டில் சிபிஐ ரெய்டு நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
காஞ்சிபுரம் ஒட்டக்கூத்தர் தெருவில் வசித்து வருபவர் திலீப் போன்ஸ்லே. இவர் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். தற்போது மாமல்லபுரத்தில் தொல்பொருள்துறை போர்மன் ஆக பணியாற்றி வருகிறார்.
பழங்கால கோவில்களை சீரமைப்பது, கோவில் வளாகங்களில் புல்தளங்களை அமைப்பது உள்ளிட்ட வேலைகளுக்கு காண்டிராக்ட் கொடுக்கும் அதிகாரம் இவருக்கு இருந்ததாம். இதைப் பயன்படுத்தி தனது நண்பர்களின் பெயர்களில் இவரே காண்டிராக்ட் எடுத்துள்ளார்.
இதன் மூலம் தொல்பொருள்துறைக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும் இந்த மோசடி மூலம் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்களையும் குவித்துள்ளார்.
இதையடுத்து தொல்பொருள்துறை சார்பில் சிபிஐ வசம் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று காஞ்சிபுரம் வந்தது. திலீப் போன்ஸ்லே வீட்டில் அதிரடி சோதனை நடந்தது.
மாளிகை போல கட்டப்பட்டுள்ள திலீப்பின் வீட்டில் அறை அறையாக சென்று போலீஸார் சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. பெருமளவிலான பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications