தமிழகத்தில் கலர் அப்பளங்களுக்கு தடை! இனி மஞ்சள், சிகப்பு, பச்சை நிறங்களில் வத்தல் கிடைக்காது
சென்னை: தமிழகத்தில் கலர் அப்பளங்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சாதாரண நிறமற்ற அப்பளங்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிக செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அப்பளங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் உளுந்து, அரிசி போன்றவற்றில் தயாரிக்கப்படும் நிறமற்ற அப்பளங்களுக்கு எந்த தடையும் இல்லை. கண்ணை கவரும் நிறங்களில் உள்ள இந்த அப்பளங்களை சாப்பிடுவதால் செரிமான கோளாறு, சிறுநீரக பாதிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சந்தைகள், சுற்றுலா தளங்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களில் இந்த நிறமூட்டி கலந்த அப்பளங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த நிறமூட்டி அப்பளங்களை வாங்கித் தர வேண்டாம். இந்த நிறமிகள் உயிருக்கும் உலை வைக்கும் என தெரிவித்துள்ளனர்.
அப்பளம், வத்தல் என்றால் பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் குழந்தைகளை ஏன் பெரியவர்களை கூட கவரும் வகையில் கலர் கலராக வத்தல் விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை, ஆரஞ்ச், சிகப்பு, பிங்க், மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் இந்த வத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் செயற்கை நிறமி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இது போன்ற நிறத்தில் கண்ணை கவரும் வகையில் உள்ளது.
அதிலும் பூ வடிவம், நட்சத்திரம், உருளை உள்ளிட்ட வடிவங்களில் இந்த வத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதிலும் போட்டி என சொல்லப்படும் மஞ்சள் நிற அப்பளங்களை கை விரல்களில் மாட்டிக் கொண்டு சாப்பிட்ட அனுபவம் எல்லாம் நிறைய பேருக்கு உள்ளது.
இனி இந்த வத்தல்களை யாரும் வாங்க வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் பலர் வீட்டிலேயே அப்பளம் தயாரிக்கிறார்கள். அவர்கள் புதினாவை அரைத்து மாவில் கலந்து பச்சை நிறத்திலும், கேரட்டை அரைத்து கலந்தால் ஆரஞ்ச் நிறத்திலும், பீட்ரூட்டை அரைத்து சேர்த்தால் பிங்க் நிறத்திலும் அப்பளம், வத்தல் கிடைக்கும்.

இது போன்ற இயற்கை நிறம் கொடுக்கும் அப்பளங்களையும் வத்தல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பலர் தக்காளியில் கூட அப்பளம் செய்கிறார்கள். பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. நிறமி சேர்க்கப்பட்ட வத்தல்கள் கண்காட்சிகளில் கூறு கட்டி விற்கப்படுகின்றன.
இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் செயற்கை நிறமிகளால் செய்யப்படும் அப்பளங்களை பொதுமக்கள் வாங்கி நோயை காசு கொடுத்து வாங்க வேண்டாம் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
